SELANGOR

கைவிடப்படும் பிராணிகள் அதிகரிப்பைத் தடுக்க கருத்தடை இயக்கம்- எம்.பி.ஏ.ஜே. நடவடிக்கை

அம்பாங் ஜெயா, ஜூன் 24- கைவிடப்படும் வளர்ப்புப் பிராணிகளின்
அதிகரிப்பை தடுப்பதற்காகக் கருத்தடை இயக்கத்தை மேற்கொள்ள அம்பாங்
ஜெயா நகராண்மைக் கழகம் (எம்.பி.ஏ.ஜே.) திட்டமிட்டுள்ளது.

கைவிடப்படும் வளர்ப்பு பிராணிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கும்
பொது மக்கள் மத்தியில் இதன் தொடர்பான விழிப்புணர்வை
அதிகரிப்பதற்கும் இத்திட்டத்தை நகராண்மைக் கழகம்
முன்னெடுத்துள்ளதாக எம்.பி.ஏ.ஜே. தலைவர் டாக்டர் அனி அகமது
கூறினார்.

நாங்கள் பிராணிகளைக் பிடித்து அவற்றைக் கொல்ல விரும்பவில்லை.
அத்தகையச் செயல்கள் மிகவும் கொடூரமானவை என்பதோடு
பிராணிகளை வதைப்பதற்கும் ஒப்பானதாகும். ஆகவே, பல்வேறு
தரப்பினரின் ஒத்துழைப்புடன் இந்த கருத்தடை இயக்கத்தை
மேற்கொள்ளவிருக்கிறோம் என்று அவர் சொன்னார்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மிருகவதை எதிர்ப்புச் சங்கத்தின்
(எஸ்.பி.சி.ஏ.) ஆதரவுடன் அடுத்த மாதம் சுமார் 500 நாய்கள் மற்றும்
பூனைகளுக்குக் கருத்தடையை மேற்கொள்ளவிருக்கிறோம் என்றார் அவர்.

நேற்று இங்கு நடைபெற்ற வளர்ப்பு பிராணிகள் நலன் மீதான
விழிப்புணர்வு இயக்கத்தை தொடக்கி வைத்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இத்திட்டம் தவிர, கைவிடப்படும் நாய்கள் மற்றும் பூனைகளுக்காகப் புகலிட
மையத்தை அமைக்கும் திட்டத்தையும் தாங்கள் கொண்டிருப்பதாக டாக்டர்
அனி கூறினார்.

இந்த திட்டத்தை மிகவும் விரிவான கண்ணோட்டத்தில் அணுக வேண்டும்.
நாய்கள் மற்றும் பூனைகளுக்கான புகலிட மையத்தை அமைப்பதற்கு தேவையான நிதியைத் திரட்டும் நடவடிக்கையில் நாங்கள் தற்போது ஈடுபட்டு வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :