ECONOMYMEDIA STATEMENTNATIONAL

 சிகிச்சை மற்றும் மறுவாழ்வை விரைவுபடுத்த 1983ஆம் ஆண்டு போதைப் பித்தர் சட்டத்தில் திருத்தம்

நிபோங் திபால், ஜூன் 30- போதைப் பித்தர்களுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு தொடர்டைய 1983ஆம் ஆண்டு போதைப் பித்தர் (சிகிச்சை மற்றும் மறுவாழ்வு) சட்டத் திருத்த மசோதா நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

போதைப்  பித்தர் மறுவாழ்வில் அனுபவம் வாய்ந்த தேசிய போதைப் பொருள் எதிர்ப்பு நிறுவனத்தின (ஏ.ஏ.டி.கே.) அதிகாரிகளின் அந்தஸ்தை உயர்த்தும் நோக்கில் இந்த சட்டத் திருத்தம் செய்யப்படுகிறது என்று அவர் சொன்னார்.

இந்த புதிய சட்டத் திருத்தத்தின் வழி மறுவாழ்வு பெற சுயமாக புனர்வாழ்வு மையங்களுக்கு வருவோர் ஏ.ஏ.டி.கே. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மூலமாக சிறுநீர் சோதனைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட போதைப் பித்தர்களுக்கு தொடர் சிகிச்சை அளிப்பதா இல்லையா என்று முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

தற்போது இம்மையத்திற்கு வரும் போதைப் பித்தர்கள் நிபுணத்துவமும் சட்ட அங்கீகாரமும் கொண்டவர்கள் என கருதப்படும் மருத்துவர்களின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு அவர்கள் சோதனை மேற்கொள்ளும் நடைமுறை அமலில் உள்ளது என அவர் சொன்னார்.

ஏ.ஏ.டி.கே அதிகாரிகளும் போதைத் பித்தர்கள் தொடர்பான விஷயங்களில் 41 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டுள்ளதோடு அனைத்துலக தர நிர்ணயித்திற்கேற்ப சான்றிதழ் முறையின் வாயிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் இந்த பிரதிரூப மாற்றம் கொண்டு வரப்படுகிறது என்றார் அவர்.

நேற்று இங்கு தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘எக்ஸ்பிரஸி ஜெனராசி கித்தா‘ எனும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த சட்டத் திருத்தத்தின் வாயிலாக போதைப் பித்தர்களுக்கு சிகிச்சையளிக்கும் மற்றும் புனர்வாழ்வளிக்கும் நடைமுறைகளை விரைவுபடுத்த இயலும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மாவ்கோம் சட்டத் திருத்தம் போல் அவையில் அறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் போதுமானது. அந்த மலேசிய வான் போக்குவரத்து ஆணையச் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக 93 வாக்குகளும் எதிர்த்து 63 வாக்குகளும் கிடைத்தன என்றார் அவர். 


Pengarang :