ECONOMYMEDIA STATEMENT

ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு உபரிக் கட்டணமா? வர்த்தகர்களுக்கு அமைச்சு எச்சரிக்கை

பாப்பார், ஜூன் 30- ரொக்கமில்ல கட்டணச் சேவையை வழங்குவதற்கு கூடுதல் தொகையை வசூலிக்கும் வர்த்தகர்களுக்கு உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சட்டமும் விதிமுறைகளும் தெளிவாக உள்ளதோடு வாய்ப்பினை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கூடுதல் கட்டணம் விதிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக 2011ஆம் ஆண்டு  விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் கொள்ளை லாபத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் அமைச்சர் டத்தோ அர்மிஸாம் முகமது அலி கூறினார்.

நெறிமுறை, விதிமுறை மற்றும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வர்த்தகம் செய்யும்படி வர்த்தகர்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறோம். கியூ.ஆர். குறியீட்டைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் பயனீட்டாளர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்க சட்டம் அனுமதிக்கவில்லை என்று அவர் சொன்னார்.

இது பேங்க் நெகாரா நிர்ணயித்துள்ளச் சட்டமாகும். ரொக்கமில்லா பரிவர்த்தனையை மேற்கொள்ளும் வர்த்தகர்களுக்கு எதிராக நாங்கள் கடும் நடவடிக்கையை எடுப்போம் என்று தனியார் நிறுவன லோரி மற்றும் பஸ் ஒப்படைப்பு  நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

 கியூ.ஆர். குறியீட்டைப் பயன்படுத்தி செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரு விழுக்காட்டை உபரித் தொகையாக வசூலித்த உணவு அங்காடி கடை உரிமையாளர் ஒருவருக்கு மலாக்கா மாநில உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்கத் துறையினர் கடந்த புதன்கிழமை 200 வெள்ளி அபராதம் விதித்தனர். 

 


Pengarang :