MEDIA STATEMENTNATIONAL

சுங்கை பாக்காப் இடைத் தேர்தல் வாக்களிப்பு சீராக நடைபெறுகிறது

நிபோங் திபால், ஜூலை 6- சுங்கை பாக்காப் இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு எந்த அசம்பாவிதமும் இன்றி சீராக நடைபெற்று வருகிறது.

இன்று காலை தொடங்கி வாக்களிப்பு சீராக நடைபெற்று வருவதோடு வாக்காளர்கள் காலையிலே தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வாக்குச் சாவடிகளுக்கு வந்து விட்டதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது கூறினார்.

இன்று காலை 10.30 மணி வரை வாக்களிப்பு தொடர்பில் எந்த எந்த புகாரும் கிடைக்கவில்லை. மாலை வரை வாக்களிப்பு சீரான முறையில் நடைபெறும் என நம்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, அதிகமானோர் காலையிலே வாக்களிக்க வந்த காரணத்தால் சில வாக்குச்சாவடிகளில் போக்குவரது நெரிசல் காணப்பட்டது. எனினும், போலீசார் வாகன நெரிசலை கட்டுப்படுத்தி  சீரான போக்குவரத்தை உறுதி செய்தனர். 

இன்று நடைபெறும் சுங்கை பாக்காப் இடைத் தேர்தலை முன்னிட்டு 65 வாக்களிப்பு மையங்களை உட்படுத்திய ஒன்பது வாக்குச் சாவடிகள் இன்று காலை 8.00 மணிக்கு ஏக காலத்தில் திறக்கப்பட்டன.

அனைத்து வாக்குச் சாவடிகளும் இன்று மாலை 6.00 மணிக்கு மூடப்படும். வாக்குகளை மொத்தமாக கணக்கிடும் பணி தாமான் டேசா ஜாவியில் உள்ள ஜாவி சமூக மண்டபத்தில் நடைபெறும்.

இத்தொகுதியில் உள்ள மொத்தம் 39,151 வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்கு இன்று வாக்களிக்கவுள்ளனர்.

இந்த இடைத் தேர்தலை நடத்தும் பணியில் 552 பணியாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அதே வேளையில் பொது ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும் தேர்தல் சுமூகமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்வதற்கும் காவல் துறையைச் சேர்ந்த 800 அதிகாரிகளும் உறுப்பினர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசின் சார்பில் ஜோஹாரி அரிபினும் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் அபிடின் இஸ்மாயிலும் போட்டியிடுகின்றனர். 

சுங்கைப் பாக்காப்  தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மே 24ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.


Pengarang :