MEDIA STATEMENT

கிளிஞ்சல் பிடிக்கச் சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி மரணம்- செரெண்டாவில் சம்பவம்

கோலாலம்பூர், ஜூலை 8- கிளிஞ்சல் பிடிக்கச் சென்ற ஒன்பது வயதுச் சிறுவன் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தான். இத்துயரச் சம்பவம் உலு சிலாங்கூர், செரெண்டாவில் உள்ள தாமான் தாசேக் தெராத்தாய் பாஸா 2 பகுதியில் நேற்று நிகழ்ந்தது.

நீரிலிருந்து மீட்கப்பட்டு செலாயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 8.55 மணியளவில் உயிரிழந்ததாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது பைசால் தாஹ்ரின் கூறினார்.

அச்சிறுவன் ஏரியில் மூழ்கியது தொடர்பில் நேற்று மாலை 6.04 மணியளவில் பொது மக்களிடமிருந்து தாங்கள் 999 என்ற அவசர எண்களில் அழைப்பைப் பெற்றதாக அவர் சொன்னார்.

கிளிஞ்சல்கள் பிடித்துக் கொண்டிருந்த போது அச்சிறுவன் ஏரியில் தவறி விழுந்ததைத் தொடர்ந்து அவனது நண்பர்கள் பொது மக்களின் உதவியை நாடியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில்  தெரிவித்தார்.

உடனடியாக மூன்று போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கூறிய அவர், பொது மக்களின் உதவியுடன் அச்சிறுவன்  மாலை 6.52 மணியளவில் ஏரியிலிருந்து மீட்கப்பட்டு விட்டதாகச் சொன்னார்.

இரவு 7.00 மணியளவில் கோல குபு பாரு தீயணைப்பு நிலையத்திலிருந்து சம்பவ இடத்திற்கு விரைந்த எழுவர் கொண்ட குழுவினர் அச்சிறுவன் உடலில் நாடித் துடிப்பு இருப்பதைக் கண்டு உடனடியாக முதலுதவி சிகிச்சை வழங்கினர் என அவர் குறிப்பிட்டார்.

மேல் சிகிச்சைக்காக அச்சிறுவன் செலாயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவனது உயிர் பிரிந்தது என்றார் அவர்.


Pengarang :