MEDIA STATEMENT

இணைய அந்நியச் செலாவணி மோசடி தொடர்பில் 18 பேர் கைது

கோலாலம்பூர், ஜூலை 12 – தென் கொரியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களை இலக்காகக் கொண்டு  அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்  கும்பலை சேர்ந்த  வெளிநாட்டு பெண் உட்பட 18 பேரை போலீசார்  கைது செய்துள்ளனர்.

ஜாலான் அம்பாங்கில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின்  இரண்டு வீடுகளில்   கடந்த ஜூலை 10ஆம் தேதி புதன்கிழமை  மாலை 6.00 மணியளவில்  மேற்கொள்ளப் பட்டச் சோதனையில்  16 உள்நாட்டு ஆடவர்களும்   ஒரு வெளிநாட்டு பெண் உள்பட இரு பெண்களும்   கைது செய்யப்பட்டதாக வங்சா மாஜூ மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமது  லாசிம் இஸ்மாயில் தெரிவித்தார்.

இச்சோதனையில் 18 கணினிகள், 43 கைபேசிகள்  உட்பட 62 வகையான உபகரணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தென் கொரிய மற்றும் அமெரிக்க குடிமக்களைக் குறிவைத்து இல்லாத அந்நியச் செலாவணி முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யத் தூண்டுவது இந்த கும்பலின் மோசடி பாணியாகும் என்று அவர் சொன்னார்.

இந்தக் கும்பல்  ‘போளி எக்ஸ்’ தளத்தை பயன்படுத்தி முதலீடு செய்ய முதலீட்டாளர்களை அழைப்பது வழக்கமாகும்.  இந்த முதலீடு மூலம் 1.5 விழுக்காடு  லாபம் கிடைக்கும் என்று வாக்குறுதியளிக்கப் பட்டுள்ளது. இருப்பினும், முதலீடு செய்த பிறகு அவர்கள் வாக்குறுதியளித்த வருமானத்தைப் பெறவில்லை என்று நம்பப் படுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

கடந்த மூன்று மாத  காலமாக சந்தேக நபர்கள்  தங்கள் நடவடிக்கையை மேற்கொண்டு வந்துள்ளதாகக் கூறிய அவர்,  மாதம் ஒன்றுக்கு 3000 வெள்ளி வரை அவர்கள் வருமானம்  பெற்றுள்ளனர் என்றார்.


Pengarang :