ANTARABANGSAMEDIA STATEMENT

தேர்தல் பிரசாரத்தில் நிகழ்ந்த பயங்கரம்- துப்பாக்கிச் சூட்டில் டேனால்ட் டிரம்ப் காயம்- இருவர் பலி

பட்லர், ஜூலை 14- நேற்று இங்கு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் அதிபர் டோனால்ட் டிரம்ப் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். இந்த துப்பாக்கிச் சூட்டில் அந்த குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கு வலது காதில் காயம் ஏற்பட்டு முகத்தில் இரத்தம் வழிந்தோடிய நிலையில் அப்பகுதியில் பெரும் களேபரம் ஏற்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் தாக்குதல்காரனும் பேரணியில் கலந்து கொண்ட ஒருவரும் உயிரிழந்த வேளையில் மேலும் இருவர் காயங்களுக்குள்ளானதாக அந்நாட்டின் உளவுப்பிரிவு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தோட்டா எனது வலது காதின் மேற்பகுதியை துளைத்தது என்று டிரட்மப் தனது ட்ரூட் எனும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறினார். பென்ஸ்சில்வேனியா மாநிலத்தின் பட்லர் நகரில் இந்த தாக்குதல் நிகழ்ந்தது.

எழுபத்தெட்டு வயதான ட்ரம்ப் தனது உரையை ஆரம்பிக்கும் போது இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததும் தனது வலது கையினால் காதைத் தொட்டுப்பார்த்த அவர், பின்னர் மைக் வைக்கப்பட்டிருந்த  போடியம் பின்னால் மண்டியிட்டுக் குனிந்தார். அதற்குள் உளவு சேவை ஏஜெண்டுகள் அவரை பாதுகாப்பாகச் சூழ்ந்து கொண்டனர்.

டிரம்ப் மீதான  தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. அந்நாட்டின் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் உயர் மட்டத் தலைவர்கள் இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டித்தனர்.

வரும் நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. ஜனநாயக கட்சியின் வேட்பாளரும் நடப்பு அதிபருமான ஜோ பைடனுடன் டிரம்ப் மோதுகிறார்.


Pengarang :