MEDIA STATEMENT

நூர் ஃபாரா படுகொலை-  விசாரணைக்காக அரசு ஊழியர் தடுத்து வைப்பு

கோலாலம்பூர், ஜூலை 16- உலு சிலாங்கூர்,  கம்போங் ஸ்ரீ கிளேடாங்கில் நேற்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்ட நூர் ஃபாரா கர்த்தினி அப்துல்லாவின் கொலை தொடர்பான  விசாரணையில் உதவுவதற்காக அரசு ஊழியர்  ஒருவர் ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றவியல் சட்டத்தின்  302வது பிரிவின் கீழ் அந்த 26 வயது இளைஞரை விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கான அனுமதியை  செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நூருல் மர்டியா முகமது ரெட்சா வழங்கியதாக  உலு சிலாங்கூர் மாவட்ட துணை காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி முகமது அஸ்ரி முகமது யூனுஸ் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபர் இன்று முதல் ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று பெர்னாமா  தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

உலு சிலாங்கூர்,  கம்போங் ஸ்ரீ கிளேடாங்கில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் 25 வயதான நூர் ஃபாரா கர்த்தினியின் உடல் நேற்று மாலை 6.00 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் நேற்று கூறியிருந்தார்.

இக்கொலை தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக அப்பெண்ணின் காதலனை தாங்கள் தடுத்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சரவாக்கைச் சேர்ந்த நூர் ஃபாரா கர்த்தினி,  சுல்தான் இட்ரிஸ் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தின் (உப்சி) முன்னாள் மாணவி ஆவார்.


Pengarang :