ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தின்பண்டத்தில் விஷம் – தோட்ட உரிமையாளருக்கு எதிரான தடுப்புக் காவல் நீட்டிப்பு

கூலாய், ஜூலை 16-  விஷம் கலந்த தின்பண்டத்தை உட்கொண்டதால் இரு சிறார்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுதோட்ட உரிமைமாளருக்கு எதிரான தடுப்புக் காவல் மேலும் இரு தினங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

போலீசாரின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மிர்ஸா முகமது, 33 வயதான அவ்வாடவரை மேலும் இரு தினங்களுக்குத் தடுத்து வைப்பதற்கு அனுமதி வழங்கினார்.

அந்த ஆடவர் கடந்த ஜூலை 11ஆம் தேதி தொடங்கி ஆறு நாட்கள் விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறார்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டியது தொடர்பில் 611வது சட்டத்தின் 31(1)வது பிரிவு மற்றும் விஷப் பொருளைக் கையாள்வதில் பொறுப்பின்றி நடந்து கொண்டது தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 284வது பிரிவின் கீழும் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கூலிம், கம்போங் உபியில் உள்ள தோட்டம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த விஷம் தடவப்பட்ட கெரோப்போக் நொறுக்குத் தீனியை உட்கொண்ட முகமது அக்கில் ஷியாக்கி நூர் சுபியான் (வயது 3) மற்றும் அவனது தம்பியான முகமது லூத் ஷியாக்கி (வயது 2) ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பயிர்களை நாசப்படுத்தும் குரங்குகளைப் பிடிப்பதற்காக அந்த சிறுதோட்டக்காரர் தோட்டத்தின் வேலியில் விஷம் தடவப்பட்ட தின்பண்டத்தை வைத்ததாக் கூறப்படுகிறது.


Pengarang :