MEDIA STATEMENTPBT

பத்து தீகா தொகுதியில்  இலவச மருத்துவ பரிசோதனை- 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஷா ஆலம், ஜூலை 20- இங்குள்ள  கம்போங் குவாந்தான் பல்நோக்கு மண்டபத்தில் இன்று நடைபெற்ற சிலாங்கூர் சாரிங்  இலவச மருத்துவ பரிசோதனை நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பத்து தீகா தொகுதியில் இவ்வாண்டு நடத்தப்பட்ட   முதலாவது  இலவச சுகாதார பரிசோதனை நிகழ்வாக இது அமைகிறது என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல்-ரஷிட் கூறினார்.

மக்களின் பங்கேற்பு மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் இருப்பது கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் சுகாதார சோதனையின் முக்கியத்துவத்தை சமூகம் உணரத் தொடங்கியுள்ளது என்பதை இது நிரூபிக்கிறது என்று அவர் சொன்னார்.

உண்மையில், நாங்களும்  மருத்துவ பரிசோதனை முகாம்களை  பத்து தீகா தொகுதியில்  ஏற்பாடு செய்துள்ளோம். ஆனால் , சிலாங்கூர் சாரிங்  திட்டத்தில் வழங்கப்படும் மருத்துவப் பரிசோதனைகள்  மிகவும் விரிவானவை என்று  மருத்துவப் பரிசோதனையை பார்வையிட்டப்  பிறகு  செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

இதற்கிடையில்,  கடந்த வாரம் சிலாங்கூகினி செய்தித்தாள் வெளியிட்ட செய்தியைப்  படித்த பிறகு சிலாங்கூர் சாரிங் திட்டத்தைப் பற்றி  தாம் அறிந்ததாக 53 வயதான இயோ பாங் கோக்  தெரிவித்தார்.

பின்னர் செலங்கா செயலி மூலம் சரிபார்த்து இலவச சுகாதார பரிசோதனை சோதனைக்கு  பதிவு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டுதான் நான் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டேன். எனக்கு எந்த நோயும் இல்லை. ஆனால்  வயதாகிவிட்டதால் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

கடந்தாண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் வலது காலை இழந்த தனது கணவர் ஆர்.ரமேஷ்,  (வயது 43) என்பவரை உடல்நலப் பரிசோதனைக்கு அழைத்து வந்ததாக இல்லத்தரசியான  ஜே.காயத்திரி (வயது 43) தெரிவித்தார்.

உண்மையில், நான் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித்  திட்டத்தைப் (பிங்காஸ்) புதுப்பிக்க வந்தேன். ஆனால் இங்கு சிலாங்கூர் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டம் இருப்பதைக் கண்டேன். இந்த வாய்ப்பை பயன்படுத்தி  என் கணவரின் உடல்நலத்தை சோதிக்க முடிவெடுத்தேன் என்றார் அவர்.

எனது கணவர் ஒரு மாற்றுத்திறனாளி. அவர்  நோய்வாய்ப் படக்கூடாது என்பதற்காக நான் அவரது உடல்நிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தேன் என்று ஐந்து குழந்தைகளின் தாயான அவர் கூறினார்.


Pengarang :