MEDIA STATEMENTSELANGOR

சுங்கை பூலோ தொகுதியில்  300 மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடி விநியோகம்- டத்தோ ரமணன் தகவல்

ஷா ஆலம், ஆக 11- தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்  கூட்டுறவு அமைச்சின் கீழ் இயங்கும் பெர்பாடானான்  நேஷனல் பெர்ஹாட் நிறுவனம்  (பெர்னாஸ்) மற்றும்  ஃபோகஸ் பாயிண்ட்  சென். பெர்ஹாட் நிறுவனம்  இணைந்து சுங்கை பூலோ தொகுதியிலுள்ள  பள்ளி மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடிகளை வழங்கின.

ரஹ்மான் புத்ரா தேசியப் பள்ளி,  புக்கிட் டாரா தமிழ்ப்பள்ளி மற்றும்  சுபாங் தேசிய மாதிரி சீனப்பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த 300  மாணவர்கள் இந்த மூக்கு கண்ணாடிகளைப்  பெற்றதாக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு  துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

அமைச்சின் கீழ் இயங்கும் பெர்னாஸ் நிறுவனமும் ஃபோகஸ் பாயிண்ட்  நிறுவனமும்   நிறுவன சமூகக் கடப்பாட்டின் (சி.எஸ்.ஆர்.) அடிப்படையில்  குறைந்த வருமானம் பெறும் பி40 மாணவர்களுக்கு இந்த மூக்கு கண்ணாடிகளை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஃபோகஸ் பாயிண்ட்   நிறுவனம்  அந்த மூன்று பள்ளிகளையும் சேர்ந்த 855  மாணவர்களுக்கு கண் பரிசோதனையை இலவசமாக மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சுங்கைபூலோ நாடாளுமன்ற தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கான உதவித் திட்டங்கள் தொடரும் என்று அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும்  துணையமைச்சருமான டத்தோ ரமணன்  கூறினார். கிட்டத்தட்ட 300 மாணவர்கள் இதன் வாயிலாக பயன் பெற்றனர். பல்லின மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவர்களுக்குக் கண் பார்வை மிகவும் முக்கியம்.

அதன் அடிப்படையில் அவர்களுக்கு மூக்கு கண்ணாடி வழங்கி உதவிய பெர்னாஸ் மற்றும் ஃபோகஸ் போயிண்ட் நிறுவனங்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே போன்று இத்தொகுதியில்  மாணவர்களுக்காக பல திட்டங்கள் மேற்கொள்ளப்படும் வேளையில் மக்கள் பயன் பெறும் நோக்கிலும் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக, சுங்கைப்பூலோ தொகுதியில் உள்ள மக்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இங்குள்ள பிபிஆர் குடியிருப்புகள் உள்ளிட்டப் பகுதிகளில் வீட்டுக்கு  வீடு  மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று டத்தோ ரமணன் கூறினார்.

இன்றைய நிகழ்வில் பெர்னாஸ் தலைமை நிர்வாகி மஸ்லான், ஃபோகஸ் போயிண்ட் நிறுவனத்தின் தலைவர்  டத்தோ லியூ சூன் லியாங், துணையமைச்சர் முதன்மை அரசியல் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்


Pengarang :