ANTARABANGSAMEDIA STATEMENT

சிறுபான்மையினரின் உரிமையை பாதுகாக்க வங்காளதேச  தலைமை ஆலோசகர் உறுதி- பிரதமர் தகவல்

கோலாலம்பூர், ஆக 14 –  சிறுபான்மையினர் உட்பட அனைத்து வங்காளதேச மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்  உறுதி செய்துள்ளார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இந்த உறுதிமொழி குறித்து தனது  மகிழ்ச்சியைப் புலப்படுத்திய அன்வார், வங்காளதேசத்தில் மீண்டும் அமைதியை நிலைநாட்டுவதில்  இடைக்கால அரசாங்கத்திற்கு உதவ மலேசியா  தயாராக உள்ளதாக  முகமது யூனுஸிடம் தாம் தெரிவித்ததாகக்  கூறினார்.

எனது பழைய நண்பரான பேராசிரியர் முகமது யூனுஸ் வங்காளதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக சமீபத்தில் நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக  நேற்று நான் தனிப்பட்ட முறையில் அவரை தொலைபேசியில்  அழைத்தேன்.

பேராசிரியர் முகமது யூனுஸ் மலேசியாவுடன் நீண்டகாலமாக நல்லுறவைக் கொண்டுள்ளார். எனவே, வங்காளதேசத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை மீண்டும்  மீட்பதில் இடைக்கால அரசுக்கு உதவ மலேசியா தயாராக இருப்பதாக நான் அவருக்கு உறுதியளித்தேன் என்று அன்வார் இன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக வங்காளதேசத்திற்கு ஒரு குறுகிய கால  பயணத்தை மேற்கொள்ளும்படி முகமது யூனுஸ் தனக்கு அழைப்பு விடுத்ததாக அவர் கூறினார்.

நோபல் பரிசு பெற்றவரான 84 வயது   முகமது யூனுஸ், வங்காளதேசத்தில் 17 உறுப்பினர்களைக் கொண்ட இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த ஆகஸ்டு 8 அன்று பதவியேற்றார்.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த பல வார போராட்டங்களைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டது.


Pengarang :