MEDIA STATEMENTSELANGOR

நெங்கிரி இடைத் தேர்தல்- 20,216 வாக்காளர்கள் புதிய பிரதிநிதியை இன்று தேர்ந்தெடுக்கின்றனர்

குவா மூசாங், ஆக. 17- இன்று நடைபெறும் நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலில் தங்களின் புதிய பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்காக 20,216 வாக்காளர்கள் இன்று தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றவுள்ளனர்.

இத்தொகுதியில் உள்ள 46 வாக்களிப்பு மையங்களை உள்ளடக்கிய 20 வாக்குச் சாவடிகள் இன்று காலை 8.00 மணிக்குத் திறக்கப்பட்டன. இந்த வாக்குச் சாவடிகள் பிற்பகல் 2.00 மணி தொடங்கி மாலை 6.00 மணிக்குள் கட்டங் கட்டமாக மூடப்படும்.

இந்த இடைத் தேர்தலை முன்னிட்டு 14 போலீஸ்கார்கள் உள்ளிட்ட வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்டு 5ஆம் தேதி தபால் வாக்குகளை  வெளியிட்டது.

இந்த இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தைப் பிரதிநிதித்து தேசிய முன்னணி வேட்பாளரான முகமது அஸ்மாவி பிக்ரி அப்துல் கனியும் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் பாஸ் கட்சியின் முகமது ரிஸ்வாடி இஸ்மாயிலும் களம் காண்கின்றனர்.

நெங்கிரி தொகுதி உறுப்பினரான முகமது அஜிசி அபு நாய்ம் பெர்சத்து கட்சியின் உறுப்பினர் அந்தஸ்திலிருந்து கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அத்தொகுதி காலியானதாக கிளந்தான் சட்டமன்ற சபாநாயகர் டத்தோ முகமது அமார் நிக் அப்துல்லா கடந்த ஜூன் மாதம் 19ஆம் தேதி அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுவதற்குரிய சூழல் ஏற்பட்டது. நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் ஒன்பதாவது இடைத் தேர்தல் இதுவாகும்.


Pengarang :