MEDIA STATEMENTSELANGOR

வெ.1.5 கோடி இழப்பை உட்படுத்திய ‘பெந்தியான் வென்ஞ்சர்ஸ்‘ முதலீட்டு மோசடி- போலீஸ் அம்பலம்

கோலாலம்பூர், ஆக. 17- பேஸ்புக் மற்றும் இண்ட்ஸ்டாகிராம் வாயிலாக
தீவிரமாக விளம்பரப்படுத்தப்பட்டு வரும் ‘பெந்தியான் வென்ஞ்சர்ஸ்‘
எனப்படும் முதலீடு மோசடியை காவல் துறையினர்
அம்பலப்படுத்தியுள்ளனர்.
மலேசியா, தைவான் ற்றும் சீனாவின் பங்குச் சந்தைகளில் இணைப்பைக்
கொண்ட முதலீட்டு வாய்ப்புகளை தாங்கள் வழங்குவதாக அந்த
விளம்பரங்களில் பொய்யானத் தகவல்கள் வெளியிடப்படுவது தாங்கள்
மேற்கொண்டு விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக புக்கிட் அமான்
வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது
யூசுப் கூறினார்.
அந்தந்த நாடுகளின் பங்குச் சந்தை நிலவரத்தைப் பொறுத்து எட்டு முதல்
23 விழுக்காடு வரையிலான லாபம் வார அடிப்படையில் வழங்கப்படும்
என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஜூலை மாதம் வரை இந்த முதலீட்டு மோசடித் தொடர்பில் 1
கோடியே 49 லட்சத்து 59 ஆயிரத்து 416 வெள்ளியை உட்படுத்திய 35
விசாரணை அறிக்கைகளை தாங்கள் திறந்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்களில் பணி ஓய்வு பெற்றவர்கள்,
வர்த்தக ஸ்தாபன உரிமையாளர்கள், இல்லத்தரசி, வங்கி அதிகாரி
உள்ளிட்ட தனியார் நிறுவனப் பணியாளர்கள், அரசுப் பணியாளர்கள்
மற்றும் விரிவுரையாளர்களும் அடங்குவர் என அவர் சொன்னார்.
இந்த மோசடித் திட்டம் மூலம் பணத்தைப் பெறுவதற்கு நிறுவனங்கள்
மற்றும் வர்த்தக ஸ்தாபனங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட 22 வங்கிக்
கணக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த மோசடி தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ்
விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இந்த திட்டத்தில்
ஏமாற்றப்பட்டவர்வர்கள் விரைந்து போலீசில் புகார் செய்யுமாறு கேட்டுக்
கொண்டார்.

Pengarang :