MEDIA STATEMENTSELANGOR

பி.எஸ்.பி. திட்டத்தின் கீழ் பண்டார் பாரு கிள்ளான் தொகுதியிலுள்ள  நான்கு பொழுதுபோக்கு பூங்காக்கள் சீரமைப்பு

ஷா ஆலம், ஆக. 17- சிலாங்கூர் பென்யாயாங திட்ட (பி.எஸ்.பி.) நிதியைக் கொண்டு நான்கு பொழுதுபோக்கு பூங்காக்களை பண்டார் பாரு கிள்ளான் தொகுதி தரம் உயர்த்தியுள்ளது.

மாநில அரசின் மானியமான அந்த 250,000 வெள்ளியைக் கொண்டு தாமான் பெர்க்கிலி, தாமான் ஸ்ரீ பெக்கான், புக்கிட் ராஜா ஆகிய இடங்களில் உள்ள பொழுது போக்கு பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டன என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குவா பெங் ஃபெய் கூறினார்.

இந்த நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளில் புக்கிட் ராஜா ஜாலான் சுமாட்ஸா மற்றும் தாமான் புக்கிட் ராஜா ஆகிய பூங்காக்களில் மெதுநடை தடங்களை தரம் உயர்த்துவதும் அடங்கும் என்று அவர் சொன்னார்.

தாமான் புக்கிட் ராஜா பூங்காவிற்கு வரும் பொது மக்களின் வசதிக்காக சிமெண்ட் இருக்கைகளை நாங்கள் அமைத்துள்ளோம். மேலும், தாமான் ஸ்ரீ பெக்கானிலுள்ள கூடைப்பந்து மைதானத்தையும் சீரமைத்துள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

இம்மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை முறையாகப் பயன்படுத்தும் அதேவேளையில் இங்கு திறந்த வெளி  தீயிடல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று பொது மக்களுக்கு அவர் ஆலோசனை கூறினார்.

மாநிலத்திலுள்ள சட்டமன்றத் தொகுதிகளில் பொது வசதிகளை மேம்படுத்துவதற்கும் புதிய கட்டமைப்புகளை நிர்மாணிப்பதற்கும்  2.4 கோடி வெள்ளி ஒதுக்கப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது கூறியிருந்தார்.

அந்த நிதியில் ஒரு கோடி வெள்ளி 15 ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளை சீரமைப்பது மற்றும் வர்ணம் பூசுவது போன்ற பணிகளுக்கு செலவிடப்படும் வேளையில் எஞ்சிய 1 கோடியே 40 லட்சம் வெள்ளி மாநிலத்திலுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா 250,000 வெள்ளி வீதம் பகிர்ந்தளிக்கப்படும் எனக் தெரிவித்திருந்தார்.


Pengarang :