MEDIA STATEMENTSELANGOR

பருவமழையை எதிர்கொள்ள சிலாங்கூர் அரசு தயார்- வெள்ள அபாய இடங்கள் அடையாளம் காணப்பட்டன

ஷா ஆலம், ஆக 17-  வரும்  நவம்பர் மாதம்  எதிர்பார்க்கப்படும் மழைக்காலத்தை எதிர்கொள்ள சிலாங்கூர் அனைத்து இயந்திரங்களையும் முழு தயார் நிலையில் வைத்துள்ளது.

சிலாங்கூர் முழுவதும் வெள்ள அபாயம் உள்ள இடங்களை மாநில அரசு கண்டறிந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை  ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

கண்காணிக்கப்படும் வெள்ள அபாயப் பகுதிகளில்  உலு லங்காட்டும் அடங்கும்.  வெள்ள காலத்தில் இப்பகுதி எப்போதும் இலக்காகக் கொள்ளப்படும். இது தவிர,  சுங்கை பூலோவும் அணுக்கமாக கண்காணிக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் பேரிடர் மேலாண்மைப் பிரிவு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று வெள்ளத்தைக் கையாள்வதில் அங்கு நிலவும்  பிரச்சனைகளைய கண்டறிந்து வருகிறது என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

பெரும்பாலான ஊராட்சி மன்றங்கள் குறிப்பாக திடீர் வெள்ள அபாயம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் வெள்ளம் தொடர்பான மாதிரி மீட்பு பயிற்சிகளை நடத்துகின்றன.

சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்கள்  அரச மலேசிய போலீஸ்
படை,  மலேசிய ஆயுதப் படைகள்,   தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை  மற்றும் மலேசியக் பொது தற்காப்புப் படை  போன்ற பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து   இத்தகைய மாதிரிப் பயிற்சிகளை மேற்கொள்கின்றன என அவர் குறிப்பிட்டார்.

தங்கள் பகுதிகளில் ஏற்படும் வெள்ளப் பேரிடரைக் கண்காணிக்கும் பொறுப்பு ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும்  வழங்கப்படுகின்றன என்று அவர் விளக்கினார்.


Pengarang :