MEDIA STATEMENTSELANGOR

சிப்பாங்கில் பிட்காயின் தயாரிப்பில் ஈடுபட்ட எழுவர் கைது

சிப்பாங், ஆக  18 –  இங்குள்ள பண்டார் பாரு சாலாக் திங்கி மற்றும் தாமான் புத்ரா பெர்டானாவில் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட  சிறப்புப் சோதனையில் பிட்காயின் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

அந்த  இரு சோதனை  நடவடிக்கைகளின் போது 30 முதல் 74 வயதுடைய மூன்று உள்ளூர் ஆண்களும் நான்கு வெளிநாட்டவர்களும்  கைது செய்யப்பட்டதாக சிப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் கமாருல் அஸ்ரான் வான் யூசோப் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அனைத்து நபர்களுக்கும் முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை. மின்சாரத் திருட்டை உள்ளடக்கிய சட்டவிரோத பிட்காயின் சுரங்க நடவடிக்கைகளைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு இந்த சிறப்பு அதிரடிச் சோதனை  மேற்கொள்ளப்பட்டது என்று அவர்  ஒரு அறிக்கையில் கூறினார்.

இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்களில் 52 பிட்காயின் இயந்திரங்கள், இரண்டு வாகனங்கள், மூன்று மடிக்கணினிகள் மற்றும் ஏழு கைப்பேசிகள் ஆகியவையும் அடங்கும். பறிமுதல் செய்யப்பட்ட  பொருட்களின் மொத்த மதிப்பு 250,000  வெள்ளியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று கமாருள் குறிப்பிட்டார்.

குற்றவியல் சட்டத்தின்  427வது பிரிவு, 1990ஆம் ஆண்டு மின்சார விநியோகச் சட்டத்தின்   37(1)வது பிரிவு  மற்றும் 1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின்  6(1)(c)வது பிரிவு ஆகியவற்றின் கீழ் இந்த சம்பவம்  விசாரிக்கப்படுகிறது என்றார் அவர்.


Pengarang :