MEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் உள்பட நான்கு மாநிலங்களில் முகப்பிட சேவை நேரம் நீட்டிப்பு- ஜே.பி.ஜே. அறிவிப்பு

புத்ராஜெயா, ஆக. 18- வாடிக்கையாளர்களின் தேவையை ஈடு செய்வதற்கு ஏதுவாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் வரும் திங்கள்கிழமை தொடங்கி முகப்பிட சேவையை சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) ஒரு மணி நேரம் அதிகரிக்கவுள்ளது.

சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு ஆகிய மாநிலங்களில் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் ஜோகூரில்  ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளிலும் இந்த சேவை நேர நீட்டிப்பு அமல்படுத்தப்படுவதாக ஜே.பி.ஜே. தலைமை இயக்குநர் எடி ஃபாட்லி ரம்லி கூறினார்.

இந்த தினங்கள் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட பரபரப்பான தினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் இந்த சேவை நேர நீட்டிப்பு இதர  மாநிலங்களில் உள்ள ஜே.பி.ஜே. அலுவலகங்களுக்கும் கட்டங் கட்டமாக விரிவுபடுத்தப்படும் என அவர் சொன்னார்.

அரசாங்கச் சேவைகளை தொடர்ந்தற்போல் விரிவுபடுத்துவதற்கு ஏதுவாக .ஜே.பி.ஜே.வின் சேவைத் தரத்தை குறிப்பாக முகப்பிடச் சேவையை தரம் உயர்த்துவதற்கு மேலாண்மைக் குழுவை தாங்கள் அமைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மலேசியா மடாணி அபிலாஷைக்கேற்ப மக்களுக்கு சௌகர்யமான சூழலை உருவாக்கும் நோக்கில் உயர்ந்த பட்ச சேவையை வழங்கும் கடப்பாட்டை  ஜே.பி.ஜே. கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஜே.பி.ஜே. உள்பட அனைத்து அரசுத் துறைகளையும் சேர்ந்த நிர்வாக மற்றும் நிபுணத்துவத் தரப்பினருக்கு சம்பள உயர்வை அறிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தாங்கள் உளப்பூர்வ நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்  தெரிவித்தார்.


Pengarang :