MEDIA STATEMENTSELANGOR

கல்வி வளர்ச்சித் திட்டங்களில்  ஸ்ரீ முருகன் நிலையத்துடன்  பலாக்கோங் தொகுதி ஒத்துழைப்பு

செய்தி ஆர்.ராஜா)
பெட்டாலிங் ஜெயா, ஆக. 25- மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த தாங்கள் ஸ்ரீ முருகன் நிலையத்துடன் ஒத்துழைக்கத் தயாராக உள்ளதாக  பலாக்கோங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெய்ன்  சுங் வெய் கூறினார்.

தனது தொகுதி வாழ் இந்திய மாணவர்களின் மேம்பாட்டிற்கு ஸ்ரீ  முருகன் நிலையத்தின் ‘முன்னேற்றம் ‘ திட்டம் சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீ முருகன் நிலையத்துடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியும் மனநிறைவும் கொள்கிறேன். அந்நிலையத்தினர் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் பலாக்கோங் இந்திய மாணவர்களுக்காக விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒன்று   நடத்தப்படுவது மிக அவசியம் எனக் கருதுகிறேன் என்று அவர் சொன்னார்.

குறைந்த வருமானம் பெறும் பி40  குடும்பங்களை இலக்காகக் கொண்டு  ஸ்ரீ முருகன் நிலையம்  வகுத்துள்ள ‘முன்னேற்றம் ‘ திட்டத்தை பலாக்கோங்  வட்டாரத்தில் விரைவில் விரிவாக்கம் செய்வது தொடர்பில்   ஸ்ரீ முருகன் நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தாவுடன் நேற்று சந்திப்பு ஒன்றை நடத்திய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்குள்ள ஸ்ரீ முருகன் நிலையத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் அதன் கல்வி பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ கணேஷ், புவனேஸ்வரி மற்றும் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய மாணவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த 42 ஆண்டுகளாக நாட்டில் ஸ்ரீ  முருகன் நிலையம் ஆற்றி வரும் அளப்பரிய பங்களிப்பை  சுரேன் படத் தொகுப்பின் வாயிலாக வெய்ன் ஓங்கிடம் விளக்கினார் .

டான்ஸ்ரீ டத்தோ எம். தம்பி ராஜாவின்  பெரும் முயற்சியின் கீழ்   தோற்றுவிக்கப்பட்ட  ஸ்ரீ முருகன்  நிலையம்  இன்று 28,000க்கும்    மேற்பட்ட  பட்டதாரிகளை உருவாக்கி  அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வித்திட்டிருப்பதை சுரேன்  சுட்டிக் காட்டினார் .

எண்ணற்ற  பட்டதாரிகள்  மருத்துவர் , பொறியியலாளர், விரிவுரையாளர், ஆராய்ச்சியாளர், ஆசிரியர்கள் என பல்வேறு துறைகளில் பணியாற்றி வளமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சிலர் உயர் கல்வி பெற்று  வெளிநாடுகளில் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார் .

சமய நம்பிக்கை, மாணவர்களின் கட்டொழுங்கு விவகாரத்தில் ஸ்ரீ முருகன் நிலையம் கொண்டுள்ள கடுமையான போக்கு போன்ற விவகாரங்கள் பற்றியும் சுரேன் பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினரிடம் எடுத்துரைத்தார்.


Pengarang :