MEDIA STATEMENT

இந்திய சமுதாயத்திற்கான பெருந்திட்டம் வாக்குகளை கவரும் யுக்தி

காப்பார் – இந்நாட்டின் குடிமக்களாய் இருந்தும் தொடர்ந்து இந்திய சமுதாயத்தின் உரிமையும் தேவைகளும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தேசிய முன்னணி அரசால் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில் அன்மையில் நாட்டின் பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்த இந்திய சமுதாயத்திற்கான பெருந்திட்டம் தேர்தல் காலத்து வாக்குறுதி என்றும் அஃது இந்திய சமுதாயத்தின் வாக்குகளை குறி வைத்து வெளியிடப்பட்ட வெற்று அறிக்கை என்றும் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.மணிவண்ணன் வர்ணித்தார்.

மலேசியாவின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் இந்தியர்களின் பங்களிப்பும் செயல்பாடும் பெருமிதமானது.காட்டை அழித்தது முதல் சாலை போட்டு நாட்டை உருவாக்கி இரப்பர்,செம்பனை முதற்கொண்டு தோட்டங்களின் மூலம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு பங்காற்றிய இந்திய சமுதாயத்தை சுமார் 60 ஆண்டுகளாய் ஓரங்கட்டி விட்டு இன்னும் 10 ஆண்டுகளில் இந்திய சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மாற்ற போகிறோம் என நஜிப் அறிவிப்பதெல்லாம் வெறும் வாய் ஜாலம் என்றும் அஃது நம்பகத்தன்மையையும் கொண்டிருக்கவில்லை என்றார்.

நடப்பியல் சூழலில் இந்திய சமுதாயம் வேலை வாய்ப்பு,குண்டர்கும்பல்,பள்ளிக்கூடம்,தொழில்திறன்,குடியுரிமை,பொருளாதாரம் உட்பட பல்வேறு நிலைகளில் பின் தங்கியுள்ள நிலையில் அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் இதையெல்லாம் சரி செய்யாமல் தொடர்ந்து இந்திய சமுதாயத்தை ஏமாற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காண்பித்தார்.கடந்த 60 ஆண்டுகளாய் நாட்டு மக்களின் நலனில் அக்கறைக் கொண்டிருக்காத அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் இந்திய சமுதாயத்தையும் தொடர்ந்து ஓராங்கட்டி தான் வந்திருக்கிறது என்றார்.

இந்நிலையில்,இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும் அவர்கள் எதிர்நோக்கி வரும் இத்தனை ஆண்டுகால பிரச்னைகளுக்கு அடுத்த பத்தாண்டில் தீர்வு காண போவதாக நஜிப் துன் ரசாக்கும் தேசிய முன்னணியும் கூறுவது பெரும் வேடிக்கையானது.அதுமட்டுமின்றி,அவர்களின் அந்த பெருந்திட்டத்தில் நிஜம் என்று எதுவுமில்லை.அஃது வெறும் மாயை போலவே உள்ளது என்றும் அவர் சாடினார்.

அவர்களின் அந்த பெருந்திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கான ஆக்கப்பூர்வ செயல் திட்டங்கள் எதுவுமில்லை.நீண்டக்காலம் அரசியலில் ஓரங்கட்டப்பட்ட  இந்திய சமுதாயத்தின் பிரச்னைகளை  இன்னும் 10 ஆண்டுகளில் தீர்ப்போம் என கூறுவது வாய் சவடால் என்றும் குறிப்பிட்டார்.

நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் நலனையும் கேள்விக்குறியாக்கி அரசியல் லாபம் அடைந்து வரும்  தேசிய முன்னணி அரசாங்கம் இந்திய சமுதாயத்தின் பிரச்னையை தீர்க்க போகிறோம் என கூறுவது வேடிக்கையான இருப்பதோடு மட்டுமின்றி அஃது முழுக்க முழுக்க தேர்தலை முன்னிறுத்தி அறிவிக்கப்பட்ட தேர்தல் யுக்தி என்றும் அவர் கூறினார்.எளிமையாக சொல்லப்போனால் தேர்தல் காலத்து இனிப்பு என்றும் கூறலாம் என்றார்.

மேலும்,இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட இந்திய சமுதாயத்திற்கான திட்டங்களும் அறிவிப்புக்களும் என்னவானது எனும் கேள்விக்கு தேசிய முன்னணியால் நிச்சயம் பதில் அளிக்க முடியாது.அவர்களின் திட்டங்கள் எல்லாம் வெறும் எழுத்தளவிலானது என்றும் வகைப்படுத்தினார்.

மேலும்,கடந்த 13வது பொது தேர்தலின் போது அம்னோ தேசிய முன்னணி ஹிண்ட்ராஃப் இயக்கத்துடன் செய்துக் கொண்ட புளூப்பிரிண்ட் ஒப்பந்தம் என்னவானது எனவும் கேள்வி எழுப்பிய மணிவண்ணன் தேசிய முன்னணியின் ஒவ்வொரு அறிவிப்பும் திட்டங்களும் வெற்று வாக்குறுதி எனவும் நினைவுறுத்தினார்.அவர்களின் அறிவிப்புக்களும் திட்டங்களும் பெருமிதம் கொள்ளும் நிலையில் இருந்தாலும் இறுதியில் எல்லாம் ஏமாற்றம் தான் என்றும் குறிப்பிட்டார்.

பொருளாதார நிலையிலும் இந்திய சமுதாயம் ஓரங்கட்டப்பட்ட சமூகமாய் இருந்து வரும் நிலையில் இன்னும் எத்தனை காலத்திற்குதான் இந்த பெருந்திட்டங்களும் பெருங்காய ஏமாற்றங்களும் என்று சாடிய மணிவண்ணன் இந்திய சமுதாயத்தை மேம்படுத்துவதில் உண்மையாகவே அம்னோ தேசிய முன்னணிக்கு அக்கறையும் விவேகமும் இல்லை என்றார்.

நடப்பியல் சூழலில் மலாய் மற்றும் சீன சமூகம் அம்னோ தேசிய முன்னணியை புறக்கணித்து வரும் வேளையில் இந்திய சமுதாயத்தின் வாக்குகளையாவது தற்காத்துக் கொள்ள அவர்கள் இம்மாதிரியான பெருந்திட்டங்களை லஞ்சமாக  முன் வைப்பதாகவும் வர்ணித்தார்.

நாட்டின் 14வது பொது தேர்தலில் அம்னோ தேசிய முன்னணியை மக்கள் புறக்கணிப்பார்கள் என நினைவுறுத்திய மணிவண்ணன் இந்திய சமுதாயம் அம்னோ தேசிய முன்னணியின் பெருந்திட்டங்களால் ஏமாற மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.

 

 

 

 

umnobn-e1464227547794

 


Pengarang :