SELANGOR

பரிவு மிக்க திட்டங்கள்; மக்களின் வாழ்வாதார மேம்பாட்டின் சான்றுகள்

ஷா ஆலம், பிப்ரவரி 14:

அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் செயல்பாடுகளும் மக்களின் நலனை முன்னிறுத்தியதாகவும் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டின் சான்றாகவும் தான் இருக்க வேண்டும்.அதற்காக தான் மக்கள் தங்களின் நலனில் அக்கறையும் பரிவும் கொண்ட ஒரு அரசாங்கத்தை ஜனநாயகரீதியில் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள். அவ்வகையில்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலாங்கூர் மாநில அரசாங்கம் முன்னெடுக்கும் ஒவ்வொரு நகர்வும் மாநில மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் வித்திடுவதோடு மக்களின் நலனையும் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டின் சான்றாகவும் விளங்குகிறது என்றால் அஃது மிகையாகாது.

டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசாங்கம் அத்தகைய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக சிந்திக்கும் அரசாங்கமாய் அம்னோ தேசிய முன்னணியின் மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கங்களுக்கும் பெரும் முன்மாதிரியாக திகழ்கிறது என்பதில் துளியும் ஐயம் கொள்ள வேண்டியதில்லை.மக்களின் நலன் குறித்து சிந்திக்க வேண்டிய மத்திய அரசாங்கம் அதன் கடமையிலிருந்து தவறிவிட்ட நிலையில் பொருளாதார சூழல் மக்களின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் மக்களின் வாழ்வாதார நலனை காக்கும் பரிவு மிக்க திட்டங்களை மாநில சிலாங்கூர் மாநில அரசாங்கம் விவேகமான முறையில் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

சிலாங்கூர் மாநில அரசாங்கம் முன்னெடுத்து வரும் ஒவ்வொரு பரிவு மிக்க திட்டங்கள் குறித்தும் அதனால் மக்கள் அடையும் நன்மைகள் குறித்தும் சிலாங்கூர் மாநிலத்தில் கிராமத்து தலைவர்களாக மக்கள் சேவையில் களமிறங்கியிருக்கும் சிலரின் கருத்தினை “சிலாங்கூர் இன்று” சிறப்பாக இங்கு பதிவு செய்ததில் பெருமிதம் கொள்கிறது.
இலவச பேருந்து சேவை
மக்களின் அன்றாட வாழ்வில் பொது போக்குவரத்து பெரும் பங்காற்றும் நிலையில் மக்களுக்கு செலவினை ஏற்படுத்தாத வகையில் இலவச பேருந்து சேவை விளங்குகிறது. ”ஸ்மார்ட் சிலாங்கூர்” திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட இலவச பேருந்து சேவை இன்றைய சூழலில் பள்ளிப் பேருந்து கட்டடணங்கள் உயர்ந்துள்ள நிலையில் பெற்றோர்களின் சுமையை குறைக்கும் வகையில் இருப்பதோடு மாணவர்களுக்கும் பெரும் பயனாக அமைந்துள்ளது.15 முதல் 30 நிமிடம் இடைவெளியில் சேவையில் ஈடுப்பட்டுள்ள இலவச பேருந்துகள் சிலாங்கூர் முழுவதும் சுமார் 100 பேருந்துகள் சேவையில் இருப்பது பெருமிதம்.

இலவச நீர்

நீர் இன்றி அமையாது உலகு எனும் வள்ளுவர் வாக்கின் அடிப்படையில் நீரின் அவசியம் உணர்ந்து சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வீடுகளுக்கும் 20 கனமீட்டர் நீரினை இலவசமாக வழங்குகிறது.நீரை மிகவும் குறைவாகவும் விவேகமாகவும் பயன்படுத்தும் ஒவ்வொரு குடும்பத்திற்கு இத்திட்டம் பெரும் பயனாக அமைவதோடு அதிகமான நீர் பயன்பாட்டை கொண்ட குடும்பங்களுக்கும் அவர்களின் கட்டணத்தின் ஒரு பகுதி சேமிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.இஃது மக்களின் பெரும் ஆதரவை பெற்ற பரிவு மிக்க திட்டங்களில் ஒன்று.

பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு
மலேசியாவிலேயே அதிகமான தமிழ்ப்பள்ளிகளை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக விளங்கிடும் சிலாங்கூர் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி மேம்பாடுகளுடன் அதன் உட்கட்டமைப்பு செயல்பாடுகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்குவது விவேகமான ஒன்றாக விளங்குகிறது.ஒதுக்கப்படும் நிதியின் மூலமாக தமிழ்ப்பள்ளிகள் நல்லதொரு சூழலில் கற்றல் கற்பித்தலை மேற்கொள்வதோடு அவை தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் தனித்துவ பங்களிப்பினை வழங்குகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் நிதி தமிழ்ப்பள்ளிகளின் துரிய செயல்பாடுகளுக்கு ஆக்கப்பூர்வமானதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூமா சிலாங்கூர்கூ திட்டம்

மனித வசிப்பிற்கு வீடு இன்றியமையாதது. அவ்வகையில் சிலாங்கூரில் வாழும் ஒவ்வொருவரும் சொந்த வீட்டினை வைத்திருக்க வேண்டும் எனும் உயரிய சிந்தனையோடு உருவான இத்திட்டம் இன்றைய இளம் தலைமுறையினருக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. தனியார் வீடமைப்புத் திட்டங்களில் இளம் தலைமுறைகள் பல்வேறு காரணியங்களால் சொந்த வீடு வாங்க முடியாமல் தவிக்கிறார்கள்.ஆனால்,சிலாங்கூர் மாநிலத்தின் இத்திட்டத்தின் கீழ் மிகவும் மலிவான விலையில் மக்கள் வாங்கும் ஆற்றலுக்கு உகர்ந்த வசதியான வீடுகளை உரிமையாக்கிக் கொள்ள மாநில அரசாங்கம் வழி செய்கிறது.இளம் தலைமுறைக்கு மட்டுமின்றி இன்னமும் சொந்த வீடு வைத்திருக்காதவர்களுக்கும் இத்திட்டம் அரும் பொக்கிசம் எனலாம்.

பெடுலி சிஹாட்

மக்களின் ஆரோக்கியமே நாட்டின் மேன்மை என்பதை உணர்ந்தே சிலாங்கூர் மாநில அரசாங்கம் மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வருடம் ஒன்றுக்கு சுமார் வெ.700 வரையிலான இலவச மருத்துவ சேவையினை பெடுலி சிஹாட் திட்டத்தின் கீழ் வழங்குகிறது. மருத்துவ செலவினம் இன்றைய சூழலில் பெரும் அழுத்தத்தை கொடுக்கும் நிலையில் மருத்துவ செலவினத்தை குறைப்பதற்காகவும் மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யவும் மாநில அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் பெடுலி சிஹாட் திட்டம் மகத்துவமான திட்டம்.ஒவ்வொருவரும் அடிப்படை மருத்துவ பரிசோதனையின் சிலாங்கூரில் சுமார் 100 கிளினிக்குகளில் பெற்றுக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹிஜ்ரா திட்டம்

வியபார ரீதியில் முன்னேற்றகரமான இலக்கில் சிலாங்கூர் வாழ் மக்களை கொண்டு செல்ல உருவாக்கப்பட்ட ஹிஜ்ரா கடனுதவி திட்டம் மாநில பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுவதோடு வியபாரிகளை வர்த்தக ரீதியாகவும் மேம்பாடு அடைய செய்வதோடு பொருளாதார ரீதியிலும் முன்னேற்றமான பாதைக்கு இட்டுச் செல்கிறது.இத்திட்டத்தின் கீழ் வியபாரத்தை விரிவாக்கம் செய்து பொருளாதார ரீதியில் தனித்துவமாய் விளங்குவதோடு புதிய வர்த்தகர்களுக்கும் பெரும் வாய்ப்பாக அமைந்து அவர்களும் துணிந்து தங்களின் வியபாரத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல வழிகோலுகிறது.

இலவச டியூசன்

அறிவார்ந்த சமூகத்திற்கு கல்வி அடிபடையான ஒன்றாக விளங்கிடும் நிலையில் இன்று கல்வி வியபாரமாக உருமாறி வருகிறது.இருப்பினும் கல்வியின் தேவை அறிந்து அதில் எல்லாரும் நன் நிலைக்கு உயர வேண்டும் என்றே இலவச டியூசன் திட்டம் உருவாக்கப்பட்டு சிறந்த முறையில் சாத்தியமாகி வருகிறது.நகர்புறங்களில் தனியார் டியூசன் கட்டணங்கள் கழுத்தை நெரிக்கும் நிலையில் உள்ளதால் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வகையிலும் அவர்களிம் சுமையினை குறைக்கும் வகையிலும் இந்த இலவச டியூசம் அதன் பங்களிப்பினை வழங்குகிறது.வசதி குறைந்த மாணவர்களின் கல்வி பயணத்தின் ஒரு அங்கமாக மாநில அரசாங்கத்தின் இலவச டியூசன் விளங்குகிறது.

மகளிர் ஆரோக்கியம்

நாட்டின் வளர்ச்சியிலும் வீட்டின் வளர்ச்சியிலும் பெண்களின் பங்களிப்பு என்பது பொருள் பதிந்தது என்பதை உணர்ந்தே உருவாக்கப்பட்ட மகளிர் ஆரோக்கிய திட்டம் காலத்திற்கு ஏற்றதாக அமைந்துள்ளது.இத்திட்டத்தின் கீழ் 35 வயதை கடந்த பெண்கள் மேமோகிராம் என சொல்லப்படும் மார்பக பரிசோதனையை இலவசமாக செய்துக் கொள்ள முடியும்.மேலும் அல்ட்ராசவுண் தொடர் பரிசோதனையையும் மேற்கொள்ள முடியும்.மகளிர் ஆரோக்கியத்திற்கு அவசியமான இந்த பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்வதால் தங்களின் உடல் ஆரோக்கியத்தை பேணிட முடிவதோடு இத்திட்டம் பெண்களுக்கு தொடர் நன்மையினை ஏற்படுத்தி வருகிறது.

அன்புத்தாய் விவேக சிலாங்கூர் (KISS)

அன்னையர்களின் சுமையினை குறைக்கும் வண்ணம் 2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மாநில அரசாங்கம் அறிமுகம் செய்த நேசமிக்க அன்னைய (கீஸ்) திட்டம் அன்னையர்களுக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம்.இத்திட்டத்தின் கீழ் வெ.2000க்கும் குறைவான வருமானத்தை பெறும் ஒவ்வொரு அன்னையரும் வெ.200ஐ ஊக்குவிப்புத் தொகையாக பெறுவார்கள்.அதிகரித்துக் கொண்டே போகும் குடும்ப சுமையினை குறைக்க இந்த ஊக்குவிப்புத் தொகை பெரும் பங்காற்றுகிறது.இத்திட்டம் சிலாங்கூர் வாழ் அன்னையர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றிருப்பதோடு குடும்ப பொருளாதாரத்திற்கு பெரும் உதவியாக இருப்பதாக அன்னையர்கள் அகம் மகிழ்கிறார்கள்.

சிலாங்கூர் மாநிலத்தின் இந்த பரிவு மிக்க திட்டங்கள் காலத்தோடு தொடர வேண்டும் எனும் கருத்துக்கள் சிலாங்கூர் வாழ் மக்களிடையே நிலவி வரும் வேளையில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் இந்த விவேகமான மக்கள் நலன் திட்டங்கள் நாடு முழுவதும் கிடைக்காதா என ஒட்டுமொத்த மலேசியர்களும் காத்திருக்கிறார்கள் என்பதுதான் இயல்பியல் உண்மை என்றால் அஃது மறுப்பதற்கில்லை.சிலாங்கூர் மாநிலத்தின் பரிவு மிக்க மக்கள் நலன் திட்டங்கள் மக்களுக்கான வாழ்வாதார சான்று என்பதில் சிலாங்கூர் மட்டுமின்றி ஒட்டுமொத்த மலேசியர்களும் உணர்ந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#சிலாங்கூர் இன்று குழு


Pengarang :