NATIONAL

சட்ட விரோத திடக் கழிவைத் தடுக்க இதர அமைச்சுகளுடன் கேபிகேடி ஒத்துழைக்கும்

புத்ரா ஜெயா, ஏப்.24:

வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்குள் சட்ட விரோதமான முறையில் கடத்தப்படும் திடக் கழிவு குவியல் விவகாரத்தை வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சு (கேபிகேடி) கடுமையாக கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதே வேளையில், நாட்டிற்குள் சட்ட விரோத திடக் கழிவு இறக்குமதியைத் தடுப்பதாக உறுதியளித்துள்ள எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச் சூழல் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சின் (MESTECC) நடவடிக்கையை கேபிகேடி வரவேற்பதாக அதன் அமைச்சர் ஜூரைடா கமாருடின் கூறினார்.

கடந்தாண்டு தொடங்கி, நாட்டிற்குள் எச்.எஸ்.3915 குறியீட்டின் கீழ் தூய்மையான திடக் கழிவுகளை இறக்குமதி அங்கீகரிக்கப்பட்ட அனுமதியின் நிபந்தனைகளை கேபிகேடி கடுமையாக்கி இருப்பதாக அவர் சொன்னார்.

இந்தக் கழிவுகள் மறுசுழற்சி பயனீட்டிற்காக இறக்குமதி செய்யப்படுவதாக அவர் விளக்கமளித்தார்.

எச்.எஸ்.3915 எனும் குறியீட்டின் கீழ் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனுமதிக்கான ( ஏபி) 18 நிபந்தனைகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்படுவதை கேபிகேடியின் தேசிய திடக் கழிவு நிர்வாகத் துறை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக ஜூரைடா தெரிவித்தார்.

ஆயினும், ஏபி தேவைப்படாத எச்.எஸ் 39 குறியீட்டின் கீழ் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட திடக் கழிவுகள் துஷ்பிரயோகிக்கப்படாதிருக்க அதன் நிபந்தனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

இந்த விவகாரத்திற்கு முழுமையான அளவில் தீர்வு காண நடப்பில் உள்ள எச்.எஸ் 3915 குறியீட்டைத் தவிர்த்து இதர குறியீடுகளையும் கண்காணிக்க வகை செய்யும் கொள்கைகள் வரையப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்ட விரோதமான முறையில் நெகிழி திடக் கழிவு குவியல்கள் நாட்டிற்குள் கடத்தப்படுவதை தடுக்கும் நடவடிக்கையில் MESTECC, மலேசிய சுங்க வரி துறை, அனைத்துலக வாணிப தொழில்துறை அமைச்சு (மிட்டி) ஆகியவற்றுடன் தமது அமைச்சு ஒத்துழைக்கும் என்றார்.

நாட்டிற்குள் சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்படும் திடக் கழிவுகளை அவற்றை ஏற்றுமதி செய்த நாட்டிற்கு திரும்ப அனுப்ப வகையு செய்யும் அனைத்துலக பாசெல் மாநாட்டின் சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தும் என்று அமைச்சர் ஜூரைடா கமாருடின் தெரிவித்தார்.

 


Pengarang :