MEDIA STATEMENTNATIONAL

கோல குபு பாரு இடைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலுடன் இன்று தொடங்குகிறது

ஷா ஆலம், ஏப் 27- கோல குபு பாரு இடைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலுடன் இன்று தொடங்குகிறது. இந்த வேட்புமனுத் தாக்கல் நிகழ்வு இங்குள்ள உலு சிலாங்கூர் மாவட்ட பல்நோக்கு மண்டபம் மற்றும் விளையாட்டு வளாகத்தில் இன்று காலை 9.00 மணிக்கு நடைபெறும்.

காலை 9.00 மணி தொடங்கி வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை வேட்பு மனுத் தாக்கல் மையத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிப்பர். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வேட்பு மனுத்தாக்கல் முடிவுக்கு வரும்.

தற்போதைக்கு ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் ஜசெகவைச் சேர்ந்த பாங் சோக் தாவ் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் உலு சிலாங்கூர் தொகுதி பெர்சத்து இடைக்காலத் தலைவர் கைருள் அஸ்ஹாரி சாவுட்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

இத்தொகுதியில் மொத்தம் 40,226 பதிவு பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 39,362 பேர் சாதாரண வாக்காளர்களாவர். மேலும் 625 போலீஸ்காரர்கள் மற்றும் 238 இராணுவ வீரர்களும் அவர்களின் துணைவியரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் புற்றுநோய் காரணமாக கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இம்மாதம் 27ஆம் தேதியும் தொடக்க க்கட்ட வாக்களிப்பு மே 7ஆம் தேதியும் தேர்தல் மே 11ஆம் தேதியும் நடைபெற தேர்தல் ஆணையம் நாள் குறித்திருந்தது.

இதனிடையே, கோல குபு பாருவில் இன்று காலை வானிலை நன்றாகவும் மாலை மற்றும் இரவில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என கணிக்கப்படுவதாக வானிலை ஆய்வுத் துறை தனது அகப்பக்கத்தில் கூறியுள்ளது.


Pengarang :