NATIONAL

அரசு சாரா இயக்கங்கள்: அமைதிப் பேரணியில் அரசியல் இருக்கக்கூடாது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 22-

ஜாவி எழுத்து விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கும் புரட்சி எனும் அமைதி பேரணியில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. அப்படி இருக்குமாயின் அது நாட்டின் நிலைத்தன்மையைப் பாதிக்குமென மலேசிய மக்கள் ஒற்றுமை நடவடிக்கை அமைப்பின் தலைவர் குணசேகரன் குப்பன் தெரிவித்தார்.

ஜாவி எழுத்தை மாணவர்களுக்குப் போதிக்க வேண்டுமா? என்பதைப் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் முடிவு செய்து கொள்ளட்டும் எனக் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அமைதி பேரணி எதற்கு என்றே தெரியவில்லை என அவர் தெரிவித்தார்.

குறிப்பாக ஆகஸ்ட் மாதம் என்பது சுதந்திர எண்ணத்தையும் ஒருமைப்பாட்டையும் விதைக்கும் மாதம். இத்தருணத்தில் இம்மாதிரியான மறியல்கள், இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

இன உணர்வுகளைத் தூண்டும் வகையில் நமது செயல்பாடுகள் அமையுமானால் அது, மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதனால் இம்மாதிரியான நடவடிக்கைகளைத் தவிர்ப்பதுதான் நல்லது எனக் குணசேகரன் ஆலோசனை வழங்கினார்.

ஜாவி எழுத்து  போதிக்கப்படுமென 2015ஆம் ஆண்டுக் கல்வி அமைச்சில் முடிவு செய்யப்பட்டது. 2020ஆம் ஆண்டு இதனை அமல்படுத்த வேண்டுமென்றும் கூறப்பட்டது. இந்நிலையில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தான் இந்த ஜாவி எழுத்தை கொண்டு வந்துள்ளது என்பது தவறான கருத்தாகும்.

இது பேசி தீர்க்க வேண்டிய விவகாரம். இதை வைத்து அரசியல் இலாபம் தேட வேண்டுமெனச் சில தரப்பினர்கள் முடிவு செய்துள்ளார்கள். இதற்கு நாம் அனைவரும் துணைப் போனால் அது, நாட்டிற்கும் நம்மிடையே நிலவும் ஒற்றுமைக்கும் மிகப் பெரிய பாதிப்பை கொண்டு வருமெனக் குணசேகரன் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் ஒற்றுமைக்கும் நாட்டின் நிலைத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செய்திகள் அல்லது காணொளிகளை வெளியிடும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில் நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வை மேலோங்கச் செய்யும் வகையில் மலேசிய மக்கள் ஒற்றுமை நடவடிக்கை அமைப்பு நாடு தழுவிய நிலையில் பிரச்சாரத்தை மேற்கொள்ளுமென்றும் குணசேகரன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

#அனேகன்


Pengarang :