ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ்களில் அந்நிய பிரஜைகளுக்கு விவேக கட்டண முறை அமல்

ஷா ஆலம், அக் 24- ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ்களில் பயணம் செய்யும் அந்நிய பிரஜைகளுக்கு டேப்
டு ரைட் எனப்படும் விவேக கட்டண வசூலிப்பு முறை அறிமுகம் செய்யப்படும்.

இந்த விவேக முறையின் கீழ் ஸ்மார்ட் சிலாங்கூர் பஸ்களில் பயணம் செய்யும் அந்நியப் பிரஜைகள் மின்னியல் அட்டைகளைப் பயன்படுத்தி அல்லது பஸ்சில் உள்ள கியு ஆர் கோட் முறையை ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தலாம் என்று எஸ்.எஸ்.டி.யு. எனப்படும் ஸ்மார்ட் சிலாங்கூர் டெலிவரி யுனிட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பஹாமி ஙா கூறினார்.

இந்த முறையின் கீழ் கட்டணத்தை விரைவாகச் செலுத்த முடியும் என்று அவர் சொன்னார்.
மலேசியர்கள் இந்த இலவச பஸ்சில் பயணம் செய்வதற்கு தங்கள் அடையாளக் கார்டை காட்டினால் போதுமானது என்றும் அவர் தெரிவித்தார்.

வரும் 2025ஆம் ஆண்டில் சிலாங்கூரை விவேக மாநிலமாக உருவாக்கும் திட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ்களில் பயணம் செய்யும் அந்நியப் பிரஜைகளுக்கு ஒரு வெள்ளி கட்டணம் விதிக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு நவம்பர் மாதம் அறிவித்திருந்தார்.
மொத்தம் 130 ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ்கள் மாநிலம் முழுவதும் 41 தடங்களில் சேவையை வழங்குகின்றன.


Pengarang :