NATIONALSELANGOR

நீர் தூய்மைக்கேடுக்கு கீழறுப்புச் செயல் காரணமா? போலீசில் புகார் செய்ய மாநில அரசு திட்டம்

ஷா ஆலம், நவ 13-சிலாங்கூரில் ஏற்பட்ட   தற்காலிக  நீர் விநியோகத் தடையினால் பாதிப்புக்குள்ளன 1263  அல்லது 99 விழுக்காடு  இடங்களுக்கு  இன்று காலை  மணி 6.00 நிலவரப்படி  நீர் வரத்து சரி செய்யப் பட்டுவிட்டதாக  ஆயர் சிலாங்கூர் எனப்படும்  நீர் நிர்வாக  வாரியத்தின் தலைமை பொது உறவு அதிகாரி எலினா  பாஷாரி  தெரிவித்தார் .

கடந்த  இரண்டு நாட்களாக  ஏற்பட்ட  நீர் விநியோக  இடையூற்றுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்ட அவர். இந்த  இக்கட்டான  வேளையில்  மிகவும் அமைதியுடன் தங்களுக்கு  ஒத்துழைப்பு  வழங்கிய  அனைத்து வாடிக்கையாளர்களுக்கும்  தங்கள்  நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

சுங்கை சிலாங்கூரில் துர்நாற்றம் கலந்த நீர் தூய்மைக்கேடு ஏற்பட்டதற்கு கீழறுப்புச் செயல் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் போலீசில் புகார் செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியமும் ஆயர் சிலாங்கூர் நிறுவனமும் அன்று பின்னிரவு 2.00 மணிக்கும் காலை 7.00 மணிக்கும் இடையே மூன்று முறை மேற்கொண்ட சோதனையில் டோன் எனப்படும் நீரில் கலந்துள்ள வாடையின் அளவு பூஜியத்தை காட்டியதாக சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

இதன் அடிப்படையில் பார்த்தால் காலை 7.00 மணிக்கும் காலை 10.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில்தான் நீர் மாசுபட்டுள்ளது. ஆகவே கீழறுப்புச் செயல் இதற்கு காரணமாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். இதன் தொடர்பில் போலீசில் புகார் செய்யப்படும் என்று மாநில சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்,

மாநில சட்டமன்றத்தில்  புக்கிட் லஞ்சான் உறுப்பினர் எலிசபெத் வோங் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

நீர் மாசுபாடு காரணமாக ரந்தாவ் பாஞ்சாங், சுங்கை சிலாங்கூர் 1,2 மற்றும் 3ஆம் கட்ட நீர் சுத்திகரிப்பு மையங்கள் இன்று மாலை 6.00 மணியளவில் மூடப்பட்டன.  இதனால் கோலாலம்பூர், பெட்டாலிங், ஷா ஆலம், கோல சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் கோல லங்காட் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 11 லட்சம் வாடிக்கையாளர்கள் நீர் விநியோகத் தடையை எதிர்நோக்கியுள்ளனர்.

 


Pengarang :