ECONOMYPBTSELANGOR

பொது முடக்க காலத்தில் அந்நிய பிரஜைகளுக்குச் சொந்தமான 1,694  கடைகள் மீது நடவடிக்கை

ஷா ஆலம், நவ 10- பொது முடக்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது அந்நிய பிரஜைகளின் ஆதிக்கத்தில் இருந்த 1,694 வணிக மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அச்சோதனை நடவடிக்கையின் போது அந்நிய பிரஜைகள் நடத்தி வந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் அதிகாரத்துவத்திற்குட்பட்ட பகுதிகளில் மிக அதிகமாக அதாவது 429 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக பகுதியில் 267 கடைகளும் உலு சிலாங்கூர் மாவட்ட மன்ற பகுதியில் 236 கடைகளும் சீல் வைக்கப்பட்டன என்று அவர் சொன்னார்,

சிலாங்கூர் மாநிலத்தில் 1,232 அந்நிய நாட்டு பிரஜைகள் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவது கண்டு பிடிக்கப்பட்ட வேளையில் அவர்களில் 1,013 பேர் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அந்நிய பிரஜைகள் சம்பந்தப்பட்ட வியாபார நடவடிக்கைகளை முறியடிப்பதில் மாநில அரசுக்கு இதர அமலாக்கத் துறையினரின் ஒத்துழைப்பும் தேவைப்படுவதாக  இங் கூறினார்.

யாரையும் கைது செய்யும் அதிகாரம் ஊராட்சி மன்றங்களுக்கு இல்லை. குடிநுழைவுத் துறையுடன் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது மட்டுமே யாரையும் கைது செய்ய முடியும் என்றார் அவர்.

சட்டமன்றத்தில் மேரு உறுப்பினர் முகமது பக்ருள்ராஸி முகமது மொக்தார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :