பல்வேறு தடுப்பூசிகள் மீது சிலாங்கூர் அரசு ஆய்வு- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், ஜன-27- சிலாங்கூர்  மாநில மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடும் இயக்கத்தை தொடங்குவதற்கு முன்னர் பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்பிலான தடுப்பூசிகள் மீது அரசு ஆய்வு மேற்கொள்ளும். அந்த தடுப்பூசிகளின் ஆக்கத்தன்மை, விலை மற்றும் அவற்றின் சாதகமான விளைவுகளை அந்த ஆய்வு உள்ளடக்கியிருக்கும் என்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் மாநில சுகாதாரத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக் குழுவுடன் விவாதித்து வருவதாக அவர் சொன்னார்.

உதாரணத்திற்கு, பைஸர் நிறுவனத்தின் தடுப்பூசியை பொறுத்தமட்டில் இரண்டு டோஸ்கள் தேவைப்படுகின்றன. மற்ற நிறுவனங்களுக்கு ஒரு டோஸ் போதும். ஆகவே, இது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு முன்னர் சுகாதார அமைச்சருடன் விவாதிக்க வேண்டியுள்ளது என்றார் அவர்.

இருபது லட்சம் பேருக்கு அல்லது மாநில மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு தடுப்பூசி போட 20 கோடி வெள்ளி செலவு பிடிக்கும் என மதிப்பிடப்பட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மாநில அரசின் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த செலவு கவனத்தில் கொள்ளப்படவில்லை எனக் கூறிய அவர், பைஸர் நிறுவனம் நிர்ணயித்த விலையை விட இந்த ஒதுக்கீடு குறைவாகும் என்றார்.

மத்திய அரசு தடுப்பூசி திட்டத்தில் மலேசியர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பதால் ஏதாவது செய்ய வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

தாங்கள் அந்நிய நாட்டினருக்கு முக்கியத்துவம் அளிப்பதாக எழும் புகார்கள் குறித்து கருத்துரைத்த அவர், இவ்விஷயத்தில் பொருளாதார அம்சங்களையும் கருத்தில் கொள்வது அவசியம் எனக் குறிப்பிட்டார். சிலாங்கூர் அரசு முப்பது முதல் ஐம்பது லட்சம் கோவிட்-19 தடுப்பூசிகளை வாங்கும் என்று மந்திரி புசார் முன்னதாக கூறியிருந்தார்.


Pengarang :