NATIONAL

மடிக்கணினி பொட்டலத்தில் “வீசினால் வெடிக்கும்“ என்ற வாசகம்- கே.எல்.ஐ.ஏ. கார்கோ மையத்தில் பரபரப்பு

புத்ராஜெயா, ஏப் 26- ஸ்கேன் இயந்திரத்தில சோதனைக்குட்படுத்தப்பட்ட
பொட்டலம் ஒன்றில் காணப்பட்ட வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பான
வாசகம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (கே.எல்.ஐ.ஏ.)
கார்கோ மையத்தில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும்
ஏற்படுத்தியது.

சரவாக் மாநிலத்தின் லிம்பாங்கிலுள்ள ஒருவரின் முகவரியைக் கொண்ட
அந்த பொட்டலம் தொடர்பில் சம்பந்தப்பட்ட ஸ்கேன் இயந்திரத்தைக்
கையாளும் ஊழியரிடமிருந்து நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் தாங்கள்
புகாரைப் பெற்றதாகக் கே.எல்.ஐ.ஏ. மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி
அஸ்மான் ஷாரிஹாட் கூறினார்.

பேட்டரி மற்றும் மின் இணைப்புக் கம்பிகள் கொண்ட அந்த பொட்டலத்தை
ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தும் போது “எச்சரிக்கை, எறியவேண்டாம்,
வெடிக்கும்“ என்ற வாசகம் அதன் மீது பொறிக்கப்பட்டுள்ளதை அந்த
ஊழியர் கண்டதாக அவர் சொன்னார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அரச மலேசிய
போலீஸ் படையின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினர் நிர்ணயிக்கப்பட்ட
நடைமுறைகளைப் பின்பற்றி ரோபோட்டிக் இயந்திரம் மூலம்
சோதனைகளை மேற்கொண்டனர். எனினும், அதில் வெடிபொருள் எதுவும்
இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

இச்சோதனைக்குப் பின் அந்த பொட்டலத்தை பிரித்த போது அதில்
மடிக்கணி ஒன்றும் கைப்பேசி சார்ஜர் வயரும் இருந்தன என்றார் அவர்.

முன்னதாக சம்பவ இடத்தில் கே9 பிரிவின் மோப்ப நாய்களைக் கொண்டு
சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் வெடி பொருள்
இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என அவர்
குறிப்பிட்ட்டார்.

எனினும், இந்த சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 506வது
பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர்
சொன்னார்.


Pengarang :