PBTSELANGOR

ஷா  ஆலம் தாமான் ஸ்ரீ மூடாவில் இலவசக் கோவிட் 19 பரிசோதனை

ஷா ஆலம் ஜன 7; – சிலாங்கூர் மாநில அரசு வழங்க முன் வந்துள்ள இலவசக் கோவிட் 19 பரிசோதனைகளில் ஷா  ஆலம், செக்சன் 25, மற்றும் தாமான் ஸ்ரீ மூடா சுற்று வட்டாரங்களைச் சார்ந்த பொது மக்கள் கலந்து பயன் பெற முந்த வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் இளைஞர் பகுதி தேசிய உதவித்தலைவரும், சுபாங் ஜெயா மாநகர் மன்ற உறுப்பினருமான ஜஸ்டின் ராஜ் கேட்டுக்கொண்டார்.
சிலாங்கூர் மாநிலத்தில் அதிக நோய்த்தொற்றுக்கு இலக்கான பகுதிகளுக்கு மட்டும் வழங்கக் கூடிய இச்சேவையை, அப்பகுதி வாழும் பொது மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இன்று  7-1-2021 கால் 8.00 மணி தொடங்கி நாளை மாலை வரை தாமான்  ஸ்ரீ மூடா டேவான் அசாலியாவில் நடைபெறும் கோவிட் 19 எந்திஜன் சோதனையான இது சிலாங்கூர் அரசின் மருத்துவ உதவி பிரிவான செல்கேர் கிளினிக் வழி பொது மக்களுக்கு இலவசமாக  வழங்கப்படுகிறது.
இப்பொழுது நாட்டில் விதிக்கப்பட்டுள்ள நடமாட்ட கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப மிகுந்த பாதுகாப்புடன் நடைபெறும் இந்த சோதனைக்கு வரும் பொதுமக்கள் பெரும் கூட்டமாக கூடுவதை தவிர்க்க செலங்கா (SELangkah) என்னும் கைப் பேசி செயலி மூலம் முன் பதிவு செய்துகொள்ளக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் என்றார் சுபாங் ஜெயா மாநகர் மன்ற உறுப்பினருமான ஜஸ்டின் ராஜ்.

Pengarang :