NATIONAL

2020  மக்கள் தொகை கணக்கெடுப்பு- 35 விழுக்காட்டினர் மட்டுமே பங்கேற்றனர்

கோலாலம்பூர், பிப் 24– 2020ம் ஆண்டிற்கான மக்கள் தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பில் இதுவரை 35 விழுக்காட்டினர் மட்டுமே பங்கு கொண்டு தங்கள் தகவல்களை பூர்த்தி செய்துள்ளனர்.

நாட்டிலுள்ள 3 கோடியே 27 லட்சம் பேரில் 1 கோடியே 4 லட்சத்து 50 ஆயிரம் பேரிடமிருந்து மட்டுமே தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக மலேசிய புள்ளிவிபரத் துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸிர் மாஹிடின் கூறினார்.

இயங்கலை வாயிலாகவும் தொலைபேசி  வழி நேர்காணல் மூலமாகவும் 2020ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் நடவடிக்கை கடந்தாண்டு ஜூலை மாதம் 7ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

எனினும், மக்களை வீடு வீடாகச் சென்று தகவல்களைப் பெறும் பெரிய அளவிலான நடவடிக்கை கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து தகவல்களைப் பெறும் நடவடிக்கையில் நாங்கள் தற்போது ஈடுபட்டு வருகிறோம். சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் வசதிக்கேற்ப இந்த கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

இயங்கலை வாயிலாக இந்த கணக்கெடுப்பில் பங்கு கொள்ள வசதிப்படாதவர்களுக்கு தொலைபேசி வழி கணக்கெடுப்பில் கலந்து கொள்வதற்குரிய வாய்ப்பினை எங்கள் அதிகாரிகள் ஏற்படுத்தித் தருவர். இதுதவிர கேள்விகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாக அனுப்புவதற்குரிய ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என அவர் மேலும் கூறினார்.

 


Pengarang :