NATIONALSUKANKINI

ஹரிமாவ் மலாயா குழுவினர் அடுத்த வாரம் கோவிட்-19 தடுப்பூசி பெறுவர்

கோலாலம்பூர், ஏப் 15– ஹரிமாவ் மலாயா கால்பந்து குழுவினர் அடுத்த வாரம் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறவுள்ளனர். இந்த செய்தி  தலைமை பயிற்றுநர் டான் சியோங் ஹூ தலைமையிலான அக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவர் டத்தோ ஹமிடின் முகமது அமின் மற்றும் விளையாட்டாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 78 பேர் வரும் திங்களன்று புத்ரா ஜெயாவிலுள்ள ஸ்ரீ செரோஜா மண்டபத்தில் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவர் என்று இளைஞர்  மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரிசால் மரைக்கான் நைனா மரைக்கான் கூறினார்.

எஃப்.ஏ.எம். தலைவர், விளையாட்டாளர்கள், பயிற்றுநர்கள் உள்பட 78 பேர் முன்கூட்டியே தடுப்பூசியைப் பெறுவர் என்ற செய்தி  தங்களுக்கு மகிழ்சசியை தந்துள்ளதாக  அவர்  கூறினார்.

இதன்வழி அவர்கள் துபாய் புறப்படுவதற்கு முன்பாகவே இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற முடியும் என்று அவர்  செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு சிற்றரசுக்கு செல்வதற்கு முன்பாக விளையாட்டாளர்களுக்கு தடுப்பூசி போடப்பபடும் என்ற உத்தரவாதம் முன்பு அளிக்கப்படாத நிலையில் விளையாட்டாளர்களும்  பயிற்றுநர்களும் தங்கள் உடல் நலம் குறித்து கவலை கொண்டிருந்தனர்.

தீவிரப் பயிற்சி மற்றும் நட்புமுறை ஆட்டங்களில் பங்கு பெறுவதற்காக அடுத்த மாதம் 15ஆம் தேதி  மத்திய கிழக்கு நாடுகளுக்கு புறப்படும் அக்குழு பின்னர், 2022 உலகக் கிண்ணம் மற்றும் 2023 ஆசிய கிண்ணப் போட்டிகளுக்கான இரண்டாம் சுற்று தேர்வாட்டத்தில் பங்கு கொள்ளும்.

 


Pengarang :