HEALTHNATIONAL

உயிருக்கு ஆபத்தைத் தரும் புதிய உருமாறிய நோய்த் தொற்று- நோர் ஹிஷாம் எச்சரிக்கை

புத்ரா ஜெயா, மே 9- அண்மைய காலமாக அதிகமான இளைஞர்கள்  நோய்த் தொற்றுக்கு ஆளாவதற்கு உருமாற்றம் கண்ட புதிய வகை கோவிட்-19 நோய்ப் பரவலே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ  டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இந்த உருமாற்றம் கண்ட நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் அளவுக்கு கடுமையான பாதிப்பை எதிர் நோக்குவதாக அவர் சொன்னார்.

இவ்வாண்டு தொடங்கி நேற்று வரை 20 முதல் 29 வயது வரையிலான 1,531 பேரும் 30 முதல் 39 வயது வரையிலான 1,452 பேரும் இந்நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக நோர் ஹிஷாம் குறிப்பிட்டார்.

இள வயதினரை பாதிக்கும் இந்த நோய்த் தொற்று, சிகிச்சைகளுக்கு குறிப்பாக ஸ்ட்ரோய்ட் மருந்துக்கு பலன் தருவதில்லை என்பதை சுங்கை பூலோ மருத்துவமனையின் மருத்துவ  நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் சொன்னார்.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான ஆகக்கடைசி நிலவரங்கள் குறித்து விளக்கமளிப்பதற்காக நடத்தப்பட்ட  செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இது நாட்டில் அச்சமூட்டக் கூடிய 56 வகை உருமாறிய கோவிட்-19 நோய்த் தொற்றுகளும் தீவிர கவனிக்கப்பட வேண்டிய 3 நோய்த் தொற்றுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அவர் மேலும் சொன்னார்.

அந்த உருமாறிய நோய்த் தொற்றுகளில் 48 ஆப்பிரிக்க வகையையும் 8 இங்கிலாந்தையும் 2 நைஜீரியாவையும் ஒன்று இந்தியாவையும் சேர்ந்தவை என அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :