NATIONAL

14-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவோம் – மக்கள் சக்தியை புலப்படுத்துவோம்

பெர்மாத்தாங் பாவ்,ஏப்23:

மீண்டும் நாட்டின் மக்கள் சக்தியை எழுப்பவும் அதனை எழுச்சிப் பெற செய்யவும் நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் மாபெரும் வெற்றியினை பதிவு செய்ய வேண்டும்.

அம்னோ தேசிய முன்னணியின் கீழ் தொலைந்துப் போன மக்கள் சக்திக்கு உயிர்கொடுக்க வரும் பொதுத் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும் என கெஅடிலான் கட்சியின் உதவித்தலைவர் நூருல் இசா நினைவுறுத்தினார்.நேர்மை,நீதி மற்றும் வெளிப்படையான போக்கினை கொண்டிருக்கும் ஹராப்பான் கூட்டணியால் மட்டுமே மக்கள் சக்திக்கு உயிரூட்ட முடியும் என்றும் கூறினார்.

ஹராப்பான் கூட்டணி வென்றால் மக்கள்தான் மாண்புமிகுகள் என கூறிய அவர் மக்களுக்கான மரியாதையும் உரிய அங்கீகாரமும் கிடைக்க ஹராப்பான் கூட்டணி நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் முழங்கினார்.

மேலும்,நாங்கள் வென்றால் அது மக்களின் வெற்றி எனவும் கூறிய அவர் 100 நாளில் ஜி.எஸ்.டி அகற்றபட்டு வாக்குறுதி நிறைவேற்றப்படுவதோடு மக்களின் பொருளாதார சுமைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.

அதுமட்டுமின்றி,பொருளாதார மேம்பாடு,சமூகநலன் அக்கறை,கல்வி ஆகியவற்றோடு இளம் தலைமுறைக்கான வேலை வாய்ப்பு ஆகியவையும் ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளபடும் என நூரூல் மக்களோடு அஸ்மின் அலி எனும் நிகழ்வில் பேசுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்றைய சூழலில் இளம் தலைமுறைக்கு வேலை வாய்ப்புகள் அந்நியமாகி போவதாகவும் பத்தில் எட்டு வேலை வாய்ப்பு அந்நிய நாட்டவர்களிடம் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் இது அம்னோ தேசிய முன்னணி அரசாங்கத்தின் நிர்வாகத்திறன் அற்ற போக்கு என்றும் அவர் சாடினார்.

மேலும்,நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் நாம் வெற்றி பெற மக்கள் ஆதரவு பெரும் அளவில் தேவைப்படுவதாகவும் கூறிய அவர் அம்னோ தேசிய முன்னணி குறிப்பிட்ட சில இடங்களில் அதிக பெரும்பான்மையை பெற முயலலாம் என்றும் அதற்கு தேர்தல் ஆணையமும் துணை போயிருப்பதையும் சுட்டிக்காண்பித்த நூருல் நாம் பெரும் விழிப்பு நிலையில் இப்பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் நினைவுறுத்தினார்.

ஹராப்பான் கூட்டணியை வெற்றி பெற செய்யவும் அம்னோ தேசிய முன்னணியிடமிருந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்றவே ஹராப்பான் கூட்டணி ஒரே சின்னத்தில் போட்டியிட முடிவு செய்ததாகவும் இது இன்றைய சூழலில் மிகவும் விவேகமானது என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராடும் கூட்டணியாய் ஹராப்பான் கூட்டணி விளங்கிடும் என்றும் மக்களுக்கான அரசாங்கம் அமைய மக்கள் விவேகமாய் ஹராப்பான் கூட்டணியை தேர்வு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட நூருல் ஹராப்பான் கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகளும் செயல்பாடுகளும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் விடுதலைக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :