NATIONAL

அம்னோ தேசிய முன்னணியின் வாக்குறுதிகளில் ஏமாற வேண்டாம்

கோம்பாக்,ஏப்23:

நாட்டின் 14வது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அம்னோ தேசிய முன்னணி கொடுக்கும் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்து விடாதீர்கள் என நினைவுறுத்தப்பட்டது.

அவர்கள் அள்ளித் தெளிக்கும் வாக்குறுதிகள் வெறும் கற்பனையே.கொடுக்கும் வாக்குறுதியை அவர்கள் ஒருபோதும் நிறைவேற்ற மாட்டார்கள்.ஓட்டுக்காக மட்டுமே வாக்குறுதியை கொடுப்பார்கள் என இளம் தலைமுறை,விளையாட்டு,பண்பாடு மற்றும் தொழில்துறை மேம்பாடு துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அமிருடின் ஷாரி கூறினார்.

நாட்டின் 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஜி.எஸ்.டி அமல்படுத்துவது குறித்து எந்தவொரு வரையறையையும் கொண்டிருக்கவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறியிருந்தார்.ஆனால்,தேர்தலுக்கு பின்னர் அம்னோ தேசிய முன்னணி ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தியது எனவும் சுட்டிக்காண்பித்தார்.

இன்று மக்கள் பொருளாதார ரீதியில் பெரும் அழுத்தத்தை எதிர்நோக்க ஜி.எஸ்.டி காரணியமாகிறது.தேர்தலுக்கு முன்னர் ஒரு பேச்சும்,தேர்தலுக்கு பின்னர் ஒரு பேச்சும் பேசுவது அம்னோ தேசிய முன்னணிக்கு வழக்கமாகி விட்டது என்றும் குறிப்பிட்டார்.

மேலும்,ஜி.எஸ்.டி அமல்படுத்துவதன் மூலம் பொருட்களின் விலை குறையும் என டத்தோ அமாட் மஸ்லான் கூறியதையும் நினைவுக்கூர்ந்த அவர் அம்னோ தேசிய முன்னணியின் இனிப்பு வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது என எச்சரித்தார்.

ஜி.எஸ்.டி இன்றைய சூழலில் மக்களை வாட்டி வதைக்கும் ஒரு வகை நோய் போல் உலா வருவதாக கூறிய அவர் அம்னோ தேசிய முன்னணியின் வாக்குகளை நம்பி மீண்டும் அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டால் ஜி.எஸ்.டி 6விழுகாட்டிலிருந்து அஃது அடுத்த நிலைக்கு உயரவும் வாய்ப்பு இருக்கிறது.மேலும்,மக்களின் வாழ்வாதாரமும் பெரும் இருள் சூழ்ந்ததாக உருமாறவும் பெரும் சாத்தியம் இருப்பதாகவும் நினைவுறுத்தினார்.

எனவே,நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் மலேசியர்கள் விவேகமாய் வாக்களிக்க வேண்டும்.அம்னோ தேசிய முன்னணியின் வெற்று வாக்குறுதியை நம்பி நாட்டின் எதிர்காலத்தை அடமானம் வைத்து விடக்கூடாது என்றும் பத்துகேவ் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இவ்வாறு பேசினார்.


Pengarang :