SELANGOR

ஸ்பிளேஷ் விவகாரம்: காலிட் இப்ராஹிமின் குற்றச்சாட்டை போர்ஹான் மறுத்தார்

ஷா ஆலம், மே 2-

மாநில குடிநீருக்கான உரிமையைப் பெற்றுள்ள ஸ்பிளேஷ் நிறுவனத்திற்கு குடிநீரின் உண்மையான மதிப்பைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமான விலையை மாநில அரசாங்கம் வழங்குவதாக டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராஹிம் கூறியுள்ள குற்றச்சாட்டை மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் போர்ஹான் அமான் ஷா மறுத்தார்.

கூட்டரசு அரசாங்கத்தின் குடிநீர் நிர்வாக நிறுவனமான பிஏஏபியிடமிருந்து பராமரிப்பு உரிமையை 1.9 பில்லியன் வெள்ளி மற்றும் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்திடமிருந்து 650 மில்லியன் வெள்ளி என்ற விலையில் அவற்றின் உரிமையை ஸ்பிளேஷ் நிறுவனம் பெற்றது. இந்தத் தொகை 9 ஆண்டு தவணையில் ஆண்டுதோறும் செலுத்த உடன்படிக்கை காணப்பட்டது என்ற விவரங்களை தஞ்சோங் செப்பாட் சட்டமன்ற உறுப்பினருமான போர்ஹான் தெரிவித்தார்.

மேலும், இந்த உரிமை மீட்பு நடவடிக்கைக்கு மாநில அரசாங்கம் எந்தவொரு நிதி ஒதுக்கீட்டையும் செய்யவில்லை என்றும் இது ஒரு நீண்ட கால தவணை கட்டணத் திட்டம் என்றும் அவர் சொன்னார்.

அதே வேளையில், மாநில நிதியை நிர்வகிப்பதில் மாநில அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் நடப்பதாகவும் நிதியை விரயம் செயவதாகவும் முன்னாள் மந்திரி பெசார் காலிட் இப்ராஹிம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும் போர்ஹான் கூறினார்.


Pengarang :