NATIONAL

கோவிட்-19 நோய் தொற்று அதிகம் கொண்ட 23 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மலேசியா வரத் தடை

கோலாலம்பூர், செப் 7- ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்ட 23 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, பெரு, கம்போடியா, தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ, ஸ்பெயின், அர்ஜெண்டினா, சிலி, ஈரான், இங்கிலாந்து, வங்காளதேசம், சவூதி அரேபியா, பாகிஸ்தான், பிரான்ஸ், துருக்கி, இத்தாலி, ஜெர்மனி, ஈராக், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகியவையே அந்த 23 நாடுகளாகும்.

மேற்கண்ட நாடுகளில் தங்கியிருக்கும் அல்லது அங்கிருந்து பயணம் மேற்கொள்ளும் அந்நாடுகளின் பிரஜைகள் அல்லது நீண்ட காலப் பயண அனுமதி வைத்திருக்கும் நபர்களுக்கும் இந்தப் பயணத் தடை பொருந்தும்.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மலேசியா மேற்கொண்டு வரும் இடைவிடா முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்பட மலேசியா வரும் வெளிநாட்டவர் மத்தியில் கோவிட்-19   இறக்குமதி சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்தத் தடை தற்காலிகமானது என்பதோடு அவ்வப்போது மறு ஆய்வும் செய்யப்படும்.
மலேசியாவில் நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்டவர்கள், மலேசியா எனது இரண்டாம் வீடு திட்டத்தில் பங்கு கொண்டவர்கள், நிபுணத்துவ அனுமதி அட்டை உள்பட்ட நீண்ட காலப் பயண  அனுமதி வைத்திருப்போருக்கும் இந்தத் தடை பொருந்தும்.


Pengarang :