NATIONALSELANGOR

இணையம் வழி வர்த்தகம் புரியக் குறைந்த வருமானம் பெறுவோரை ஊக்குவிப்பீர் தொழில்முனைவோர் கழகம் வலியுறுத்து

ஷா ஆலம், செப் 7- வசதி குறைந்தோர் வருமானத்தையும் தங்கள் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக இணையம் வாயிலாக வர்த்தகம் புரிவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும்படி சிலாங்கூர் மாநில அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஏழ்மைக்கான வருமான அளவீடு 980 வெள்ளியிலிருந்து 2,208 வெள்ளியாக இவ்வாண்டு
உயர்த்தப்பட்டுள்ளதால் நாட்டில் ஏழைகள் பட்டியலில் சேர்வோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகச் சிறு தொழில்முனைவோர் கழகத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி அப்துல் அஸாரி அப்துல் வாஹிட் கூறினார்.
இது போன்ற சூழலில் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அரசு அமல்படுத்துவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

வசதி குறைந்தவர்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு ஏதுவாக ஷோப்பி
மற்றும் கிராப் போன்ற இணையம் வாயிலான வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்பு
வழங்குவது குறித்து மாநில அரசு தனது 2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில்
பரிசீலிக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

இங்குள்ள செத்தியா சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2021ஆம் ஆண்டிற்கான வரவு
செலவுத் திட்டம் மீதான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் தொழில்முனைவோர் துறைக்கான மாநில ஆட்சிக்குழு
உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் மற்றும் பரிவுமிக்க அரசாங்கத் துறைக்கான மாநில
ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கோவிட்-19 நோய் தொற்று காலகட்டத்தில் இலக்கவியல் சிறு தொழில்முனைவோருக்குப்
பெரிதும் உதவியது. இலக்கவியல் பற்றி அறிந்து கொள்ளவும் இணையம் வாயிலாக எவ்வாறு தங்கள் பொருள்களைச் சந்தை படுத்தலாம் என்பதைக் கற்றுக் கொள்ளவும் வேண்டிய கட்டாயத்தை இந்தக் கோவிட்-19 ஏற்படுத்தியது என்றார் அவர்.


Pengarang :