SELANGOR

வியாபாரிகளுக்கு தற்காலிக லைசென்ஸ் வழங்குவதில் ஊராட்சி மன்றங்கள் தீவிரம்

ஷா ஆலம், செப் 8- வியாபாரிகளுக்கு தற்காலிக லைசென்ஸ் வழங்கும் நடவடிக்கையில் மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சி மன்றங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக ஊராட்சித் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸி ஹான் கூறினார்.

இது தொடர்பான விண்ணப்பங்களுக்கு எழு நாட்களில் அங்கீகாரம் அளிக்கும் முயற்சியில் அந்த ஊராட்சி மன்றங்கள் முனைப்பு காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வியாபாரிகளுக்கு லைசென்ஸ் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்துவதாக இருந்தால் எனக்காகவோ மந்திரி புசாருக்காகவோ காத்திராமல் பொதுமக்களின் நலனைத் கருத்தில் கொண்டு உடனடியாக நடத்தும்படி அனைத்து ஊராட்சி மன்றங்களையும் கேட்டுக் கொண்டுள்ளேன் என்று இங் சொன்னார்.

வியாபாரிகளுக்கு லைசென்ஸ் வழங்குவதை விரைவுபடுத்தும்படி தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் வலியுறுத்தியிருந்தது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

மந்திரி புசார், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொண்ட 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான கலந்துரையாடல் நிகழ்வின் போது ரோட்சியா தனது இந்த கருத்தை முன்வைத்தார்.

சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் இதுவரை 600 தற்காலிக லைசென்ஸ் விண்ணப்பங்களை அங்கீகரித்துள்ளத் தகவலை இங் வெளியிட்டார். கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு பிந்தைய சூழலைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற தற்காலிக வர்த்தக லைசென்ஸ் வழங்கும் திட்டத்தை தாங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :