ECONOMYPBTSELANGOR

கிள்ளானில் தீபாவளி சந்தை ரத்து நகராண்மைக்கழகம் அறிவிப்பு

கிள்ளான், அக் 10- கிள்ளான் மாவட்டத்தில் கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இங்குள்ள லிட்டில் இந்தியா பகுதியில் நடத்தப்படும் தீபாவளி சந்தையை கிள்ளான் நகராண்மைக் கழகம் ரத்து செய்துள்ளது.

சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள கிள்ளான் வட்டாரத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கிள்ளான் நகராண்மைக்கழகத் தலைவர் டாக்டர் அகமது பாட்சில் அகமது தாஜூடின் கூறினார்.

அண்மைய காலமாக கிள்ளானில் இந்த பெருந்தொற்று சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு இங்குள்ள லோரோங் திங்காட் பகுதியில் நடைபெறும் தீபாவளி சந்தையை ரத்து செய்ய நாங்கள் முடிவெடுத்துள்ளோம் என்றார் அவர்.

கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் இந்த முடிவு காரணமாக வரும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு இரு வாரங்களுக்கு வியாபாரம் செய்வதற்கு தயாராக இருந்த  வர்த்தகர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றாக கிள்ளான் விளங்குகிறது. லிட்டில் இந்தியா எனப்படும் ஜாலான் துங்கு கிளானா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் இந்தியர்களின் வர்த்தக கேந்திரமாக விளங்கி வருகின்றன.

தீபாவளியின் போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் பொருள்களை வாங்க இங்கு வருவது வழக்கம். அதோடு மட்டுமின்றி மாநில அரசின் ஏற்பாட்டில் கலை நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெறும்.

 


Pengarang :