ECONOMYSELANGOR

பொருளாதார மீட்சிக்கு இலக்கவியலே அடித்தளம் மந்திரி புசார் கருத்து

ஷா ஆலம், அக் 14- கோவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்யும் முயற்சியாக சிலாங்கூர் அரசு இலக்கவியல் துறைக்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வரும்.

பொது மக்களின் வருமானத்தை அதிகரிப்பது உள்பட பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டும் அனைத்து நடவடிக்கைளிலும் விவேக தொழில்நுட்பம் முழு அளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கோவிட் நோய் பரவத் தொடங்கிய காலத்தில் நடப்பு நிலை குறித்து நாம் அனைவரும் கவலை கொண்டிருந்தோம். எனினும், இலக்கவியல் நமக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதோடு நாம் கணித்ததை விட மிக விரைவில் பொருளாதாரத்தை  மீட்சியுறச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்ட காலகட்டத்தில் பொதுமக்கள் ஆன்லைன் எனப்படும் இயங்கலை வாயிலாக வர்த்தகம் புரிந்து கூடுதல் வருமானத்தை பெறுவதற்கு மாநில அரசு உதவி நல்கி வந்தது என்று அவர்  மேலும் சொன்னார்.

இன்று இங்கு 2020ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டை இயங்கலை வாயிலாக  தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த  ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி சிலாங்கூர் அரசு கிராப் சிலாங்கூர் மற்றும் நோன்புப் பெருநாளின் போது பலகாரங்களை இணையம் வாயிலாக விற்க உதவும் பிளாட்போர்ம் சிலாங்கூர் ஆகிய இரு மின்னியல் வர்த்தக தளங்களை அறிமுகம் செய்தது.


Pengarang :