NATIONALSELANGOR

பாதுகாப்பு ஆலோசனை மன்றத்தில் பல இனச் சமயம் உட்பட இதர துறைகளின் நிபுணர்களும் இடம்பெற வேண்டும்.

ஷா ஆலம் 17 அக்;  நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாடு ஆணைகள் என்ற போர்வையில் கற்பனைக்கு எட்டாத சிலவற்றை (SOP) என்னும் சீரான செயலாக்க நடைமுறை என அறிவித்து மக்களைக் குழப்பும் அல்லது நகைப்புக்கு இட்டுச்செல்லுவதைப் பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான  டத்தோ  டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

மக்களின் பாதுகாப்பில் கோவிட்19 தொற்று நோய் பரவலைத் தடுப்பதில் அனைவருக்கும் அக்கறை உண்டு, அதே வேளையில் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் விதிமுறைகளும் மக்கள் பின்பற்றத் தக்கதாக இருப்பது நலமாகும். அது பலருக்கு வீண் விரயங்களையும், அசௌகரியங்களையும் மன உலைச்சல்களையும் தவிர்க்கும் என்றார் அவர். 

இவ்வாண்டு மார்ச் மாதத்தில் அமல் படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் முழு முடக்கத்திலிருந்து சற்று மாறுபட்டு, இப்பொழுது பொருளாதாரம் மற்றும் மக்கள் வாழ்வாதாரத் தொழில்களைச் செய்ய அனுமதிக்கும் தளர்வுகளைக் கொண்டிருக்கிறது.  அதே போன்று நோய் தொற்றைக் கட்டுப்படுத்தி மக்களின் அன்றாட வாழ்வினைப் பாதிக்கும் விவகாரங்கள் தங்குதடையின்றி நடத்தவேண்டிச் சில தளர்வுகளும், மாற்றங்களும் மற்றத் துறைகளிலும் முன்னெடுக்கப் படவேண்டும்.

இப்பொழுது, முஸ்லிம்  அல்லாதவர்கள் திருமணத்திற்கு அறுவருக்கு மேல் கூடக்கூடாது என்றிருப்பதை மறு ஆய்வு செய்ய வேண்டும். அந்த விதிமுறை நகைப்பிற்குரியதாக உள்ளது.

மணமக்கள் மற்றும்  அவர்களின் பெற்றோர்கள் கூடினாலும் புரோகிதர் இல்லாமல் இந்து திருமணங்களை நடத்த முடியாது, ஆக, புரோகிதர் இல்லாமல் திருமணமா என்ற கேள்வி எழுகிறது. அதே போன்று சாட்சிகள் இன்றி திருமணம் செய்யச் சில திருமணங்கள் அனுமதிப்பதில்லை. ஆக மக்கள் இயல்பு வாழ்க்கை தொடரத் திருமணங்களுக்கு ஒன்று கூடுவதை 20 பேர்களுக்கோ அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலானவர்கள் ஒன்றுகூட அனுமதிப்பதும் மற்றும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பட்ட விதிகளின் மற்றக் கூறுகள் கண்டிப்பாகப் பின் பற்றுவதை உறுதி செய்யும்  மாற்று  வழியாகும். 

இதுபோன்ற இக்கட்டுகளைத் தவிர்க்கப் பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சரும், பாதுகாப்பு மன்றமும் அதன்  ஆலோசனை மன்றத்தில் எல்லா இனச் சமயம் தவிர்ந்து இதர துறைகளின் நிபுணர்களையும்  கொண்டிருக்க வேண்டும் என்றார் அவர். 

மேலும் எல்லா இனக் கலாச்சார, சமயக் கூறுகளுக்கு மதிப்பளித்து இயற்றப்படும் விதிமுறைகளாகத் தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் ”சீரான செயலாக்க நடைமுறைகள்” அமைந்தால் மலேசிய மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான  டத்தோ  டாக்டர் சேவியர் ஜெயக்குமார். 


Pengarang :