ECONOMYSELANGOR

கிராமப் புறங்களுக்கு மினி பஸ் சேவை சட்ட மன்ற உறுப்பினர்கள் வரவேற்பு

ஷா ஆலம், அக் 17-  கிராமப் புறங்களில் ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச மினி பஸ் சேவையை அறிமுகப் படுத்தும் சிலாங்கூர் அரசின் திட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த மினி பஸ் சேவையை கிராமப் புறங்களில் அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தை தாம் வரவேற்பதாக புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜுவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார். எனினும், அந்த மினி பஸ் சேவை புதிய தடங்களுக்கு விரிவு  படுத்தப்பட வேண்டுமே தவிர தற்போதுள்ள தடங்களில் பஸ்களை மாற்றுவதை நோக்கமாக கொண்டிருக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

கிராமப் புறங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே பஸ் சேவையை பயன்படுத்துவர் என்பதால் மினி பஸ் சேவை ஆக்ககரமானதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, புதிய தடங்களின் அதிகரிப்புக்கு ஏற்ப கிராமப் புறங்களுக்கான மினி பஸ் சேவையும் அமைய வேண்டும் என்று டுசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் எட்ரி பைசால் எடி யூசுப் கூறினார். இலவச பஸ் சேவை தற்போது நகர்ப்புறங்களில் மேற்கொள்ளப் படுகிறது. இந்த சேவையை கிராமப் புறங்களிலும் விரிவுபடுத்தும் திட்டத்தை வரவேற்கிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப் புறங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே இலவச பஸ் சேவையை பயன்படுத்துவர் என்பதால் மினி பஸ் சேவையை அறிமுகப்படுத்துவதன் மூலம் பராமரிப்பு செலவுகளை குறைக்க முடியும் என்று மோரிப் சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுள் பகாருடின் கூறினார். தற்போது பயன்பாட்டில் உள்ள பஸ்களை வேறு நோக்கங்களுக்கு குறிப்பாக  அரசு இலாகாக்களின் தேவைக்கு பயன் படுத்தலாம் என்று அவர் ஆலோசனை கூறினார்.


Pengarang :