NATIONALRENCANASELANGOR

சுய அரசியல் வாழ்வுக்குக் கோவிட்-19 நோய் தொற்றலை ஏணி படியாகக் கொள்ளும் ஒரே பிரதமர்

கோல லங்காட், அக் 24 :- பிரதமர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசினின் இன்றைய அரசியல் நகர்வுகள், கோவிட்-19 நோய்த் தொற்றினைக் காரணம் காட்டி, அவசரகாலச் சட்டத்தைத் தனது அரசியல் கேடயமாகப் பயன்படுத்தத் திட்டமிடுவதாக உள்ளது.

நம் நாட்டுக்கு இதுவரை எவரும் செய்யத் துணியாத மகா பாதகமாகும். வளரும் நாடான மலேசியாவுக்குத் தவறான வழிகாட்டலாகும். சர்வாதிகாரத்துக்கு இட்டுச்செல்லும் செயலை மக்கள் அனுமதிக்கக் கூடாது என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

பிரதமர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசினின் பி.என் அரசாங்கத்தை அவரால் காப்பாற்ற முடியாது என்றால் அவர் பதவியை ராஜினாமா செய்வதே முறை, அதுவே அவர் நாட்டுக்கும் , மக்களுக்கும் செய்யும் பெரும் சேவையாகும். அதைவிடுத்து, பதவியில் ஒட்டிக்கொள்ள வேறு குறுக்கு வழிகளைத் தேடக்கூடாது என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

மலேசியர்களின் இன்றைய அவசரத் தேவை, நோய்க்கு மட்டும் மருந்தில்லை. நம்பிக்கை இழந்த மக்கள் மனதிற்கு, ஊதியம் இழந்த குடும்பங்களுக்கு, எதிர்காலத்தை இழந்த இளைஞர்களுக்கு, நாட்டின் பொருளாதாரச் சிக்கல்களுக்கும் சரியான பாதை வகுக்கும் தலைமைத்துவமே நாட்டுக்குத் தேவைப்படுகிறது.

டத்தோ ஸ்ரீ அன்வாரால் மட்டுமே அப்படிப்பட்ட ஒரு அரசாங்கத்தை, அன்னிய முதலீடுகளைக் கவரும், உள் நாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் பெறவும், மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் அரசாங்கத்தைக் கொடுக்க இயலும் என்று அம்னோ தலைமைத்துவம் நம்புகிறது.

இதுவே, பி. என் பங்காளியான அம்னோவின் மன மாற்றத்திற்கான முக்கியக் காரணம், அதுவே, அம்னோவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில், நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வாரை ஆதரித்துச் சத்தியப் பிரகடனத்தை அம்னோவின் தலைவர் வழங்கியதன் நோக்கமாகும்.

பிரதமர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசினின் ஆறு மாத ஆட்சியில், அதன் பங்காளியான அம்னோவே நம்பிக்கை இழந்து விட்டது. உலக நாடுகள் கோவிட்19 நோய் தொற்றிலிருந்து நாட்டை விடுவித்துப் பொருளாதார வளர்ச்சிக்குப் படி அமைக்கும் வேளையில் அரசியல் வாழ்வுக்குக் கோவிட்-19 நோய் தொற்றலை ஏணி படியாகக் கொள்ளும் ஒரே பிரதமர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசினாக மட்டுமே இருக்க முடியும்.

மூசா அமான் மீதான வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுச் சபா மாநிலத் தேர்தலுக்கு வழியமைத்துச் சபாவில் மக்களைப் பலி கொடுத்ததுடன், கோவிட்-19 நோய்த் தொற்றின் பரவலை நாட்டில் பெரிய அளவில் வெடிக்கப் பாதையமைத்தவர் டான் ஸ்ரீ மொகிதீனே ஆகும்.

இது, மக்கள் மீது இவருக்குக் கிஞ்சிற்றும் அக்கறையில்லை என்பதனை உடனிருந்த அம்னோ நன்கு புரிந்து கொண்டது. அதனால் மனம் உடைந்த அம்னோத் தலைவர்களே நாட்டைக் காப்பாற்றச் சகலத் தகுதிகளும் கொண்டவர் டத்தோ ஸ்ரீ அன்வார் என்பதனை ஏற்று, அவருக்கு ஆதரவான சத்தியப் பிரமாணத்தை அளித்தனர்.

நாட்டு மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி நம்பிக்கையுடன் நாட்டு மக்களை அரவணைத்து முன்னேற்றக் கூடிய ஒரு வியூகம் தேவை, ஒரு தலைவர் தேவை, தலைமைத்துவம் நாட்டிற்கு மிக அவசியம் என்பதனை நாட்டு மக்களும் அரசர்களும் நன்கு அறிந்துள்ளனர்

கடந்த 14வது பொதுத்தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பைப் புறந்தள்ளிக் குறுக்கு வழியில் ஆட்சியமைத்த இன்றைய மலேசியப் பிரதமர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசின் தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள ஏதாவது குறுக்கு வழியைத் தேடுவார் என்பதனை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், முன்னறிந்தே சில நகர்வுகளை மேற்கொண்டுள்ளார் என்பதனை மக்கள் இப்பொழுது உணரத்தொடங்கி விட்டனர்.

கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பத்திரிக்கையாளர்களிடம் பிரதமர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசினின் ஆட்சி பெரும்பான்மை இழந்து விட்டார் என்று கூறியதை மீண்டும் உறுதி படுத்தும் வண்ணம், அக்டோபர் 13ந் தேதி மேன்மை தாங்கிய பேரரசர் அவர்களைச் சந்தித்துத் தனக்கு 120க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதையும் உறுதிப்படுத்தினார்.

சபா தேர்தல் வெற்றிக்குப் பின் இந்தக் கோவிட் 19 நோய் தொற்றுக காலத்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்தால், நாட்டுக்குப் பெரிய செலவு என்பதுடன், நாட்டையே அழிக்க வல்ல நோய்த் தொற்றுக்கு இடமளிக்கும் என்பதனை மனதில் கொண்டே டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மாமன்னரிடம் தனது கூட்டணியின் பரிந்துரையை முன்வைத்தார்.

ஆனால், இரண்டு முறை கோவிட் 19 நோய் தொற்றைப் பற்றி கவலையின்றி, ஆட்சி மாற்றத்திற்கும், ஆட்சி கலைப்புக்கும் வழியமைத்த கூட்டமாகப் பிரதமர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசினின் கூட்டம் இருந்து வந்துள்ளதை நாடே அறியும். அதற்கு மூன்றாம் முறை வாய்ப்பளிக்கக் கூடாது என்பதே நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு மலேசியரின் அவாவாகும்.

அதனாலேயே, சபா தேர்தல் முடியும் முன்னரே மாட்சிமை தாங்கிய பேரரசரைக் கண்டு டான் ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை, ஆட்சிப் பொறுப்பை ஏற்க மாற்று அணிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று உலக மறிய கோரிக்கை விட்டார் டத்தோ ஸ்ரீ அன்வார்.

ஆனால், பிரதமர் மொகிதீனுக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்த அம்னோ உறுப்பினர்களை ஓரளவு சரிக்கட்டிப் பதவியில் ஒட்டி கொண்டிருக்கும் பி.என் அரசாங்கத்தால், நாடாளுமன்றத்தில் அதன் உண்மையான பலத்தை நிரூபிக்க முடியாது. அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டை நிறை வேற்ற அதற்குப் போதிய உறுப்பினர்கள் ஆதரவு இல்லை. என்பதனை மக்களிடமிருந்து மறைக்க, நாடாளுமன்றத்தையே செல்லா காசாக்கும் திட்டமே, அவசரக்காலம்.

ஜனநாயகத்துக்கு எதிராக இவர் ஆரம்பிக்கும், இந்தக் குறுக்கு வழி வெற்றி பெற்றால், அதன் பின் நாம் அனைவரும் உயிராக நேசிக்கும் மலேசியாவுக்கே இருண்ட காலமாகிவிடும், சுய அரசியலுக்கு அவசரக்காலச் சட்டத்தைக் கேடயமாக்கும் இவர் செயல் மலேசிய ஜனநாயகத்தின் முதுகு எலும்பினை உடைப்பதற்கு ஒப்பாகும்.

அரசியலுக்காக அவசரக்காலச் சட்டத்தைப் பயன்படுத்துவது இந் நாட்டு ஜனநாயக அமைப்புக்கு அடிக்கப்படும் சவப்பெட்டியின் கடைசி ஆணியாக இருக்கும்.. அதைத் தடுப்பாரா நமது மாமன்னர் என்று நாட்டு மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்


Pengarang :