EVENTSELANGORYB ACTIVITIES

கோவிட் பாதுகாப்பு உடை தயாரிப்பு மூலம் தினசரி வெ.120 சம்பாதிக்கும் தனித்து வாழும் தாய்மார்கள்

ரவாங், அக் 25- முன் களப்பணியாளர்களுக்கு பி.பி.இ. எனப்படும் கோவிட் பாதுகாப்பு உடைகளைத் தைத்து கொடுப்பதன் மூலம் ரவாங் வட்டாரத்திலுள்ள பெண்களும் தனித்து வாழும் தாய்மார்களும் நாளொன்றுக்கு 90 வெள்ளி முதல் 120 வெள்ளி வரை சம்பாதிக்கின்றனர்.

ஒரு உடைக்கு ஆறு வெள்ளி கட்டணம் வீதம் நாளொன்றுக்கு 15 முதல் 20 உடைகளை அவர்கள் தைப்பதாக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.

கடந்த மாதம் தொடக்கம் முதல் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசு சாரா அமைப்புகளான மெர்சி மற்றும் ஸ்ரீகாண்டி ரவாங் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக வருமானத்தை இழந்த பெண்கள் மற்றும் தனித்து வாழும் தாய்மார்களுக்கு உதவும் நோக்கில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு முதல் கட்டமாக தயாரிக்கப்பட்ட உடைகள் முன் களப்பணியாளர்களின் தேவைக்காக சபாவுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

செலாயாங் நாடாளுமன்ற வழங்கிய ஆறு தையல் இயந்திரங்களின் உதவியுடன் நாடாளுமன்ற உறுப்பினரின் சேவை மையத்தில் இந்த தையல் பணி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :