SELANGOR

பழுதடைந்த குழாய்களை மாற்ற வெ. 57.9 கோடி ஒதுக்கீடு

ஷா ஆலம், அக் 31- பழுதடைந்த குடிநீர்க் குழாய்களை  மாற்றுவதற்கு சிலாங்கூர் அரசு 57 கோடியே 90 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது. குழாய்களை மாற்றும் பணி இவ்வாண்டு தொடங்கி வரும் 2022ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்படும்.

இதுவரை 303 இடங்களில் உள்ள 716 கிலோ மீட்டர் நீள குழாய்கள் மாற்றப்பட வேண்டிய நிலையில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

ஆண்டுக்கு 150 கிலோமீட்டர் அளவுக்கு பழுதடைந்த குழாய்களை மாற்ற ஆயர் சிலாங்கூர் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக நிறுவனம் இலக்கு வகுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பழைய குழாய்களை மாற்றுவதற்கு கடந்த 2016 முதல் 2019 வரை 52.9 கோடி வெள்ளி செலவிடப்பட்டுள்ள வேளையில் இவ்வாண்டு முதல் வரும் 2022 வரை மேலும் 57.9 கோடி வெள்ளி செலவிடப்படும் என அவர் தெரிவித்தார்.

அடுத்த ஐந்தாண்டுகளில் வீணாகும் நீரின் அளவை 25 விழுக்காடாக குறைக்க வேண்டுமானால் சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் சுமார் ஆறாயிரம் கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய்களை மாற்ற வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

 

 


Pengarang :