SELANGORWANITA & KEBAJIKAN

சிறார் உணவு வங்கித் திட்டத்திற்கு 10 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு

ஷா ஆலம், நவ 3- சிறார் உணவு வங்கித் திட்டத்திற்கு சிலாங்கூர் மாநில அரசு பத்து லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள பி40  எனப்படும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த ஆறு வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறார்களை இலக்காக கொண்டு இத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

போதுமான ஊட்டச்சத்து இல்லாத காரணத்தால் இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் காணப்படும் உடல் ஆரோக்கியப் பிரச்சனையை தீர்ப்பதற்கு இதுவே தக்க தருணமாகும் என்று வீடமைப்பு மற்றும் நகர்ப்புற நல்வாழ்வுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.
நகர்ப்புற ஏழ்மையே தற்போதைக்கு கடுமையான பிரச்சனையாக உள்ளதால் அப்பகுதியை சேர்ந்த சிறார்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சிலாங்கூரில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டு பகுதிகள் நகர்ப்புறங்களாக உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இவ்விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்குரிய தருணம் வந்துவிட்டது என்றார்.
அம்பாங் கேலக்சி பேரங்காடியில் நடைபெறும் தீபாவளி சந்தையை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினர்.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அனைத்து 56 சட்டமன்ற தொகுதிகளிலும் உணவு வங்கித் திட்டத்தை அமல்படுத்துவதற்கு ஏதுவாக  அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மாநில வரவு செலவுத் திட்டத்தில் 60 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கோத்தா டாமன்சாரா, மக்கள் குடியிருப்பை சேர்ந்த 33 விழுக்காட்டு சிறார்கள் ஊட்டச்சத்தின்மை காரணமாக வளர்ச்சி குன்றி காணப்படுவதாக சிலாங்கூர் மாநில சுகாதார இலாகா மேற்கொண்ட ஆய்வில் கூறப்பட்டது.

Pengarang :