ECONOMYSELANGOR

அந்த 100 கோடி வெள்ளி மாயமாகவில்லை – அடிப்படை வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டது மந்திரி புசார் விளக்கம்

ஷா ஆலம், நவ 5- சிலாங்கூர் மாநில அரசிடம் கையிருப்பில் இருந்த 100 கோடி வெள்ளி மாயமாகவில்லை. மாறாக மாநிலத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கமளித்தார்.

அந்த நிதியைக் கொண்டு டபோஹான் டாகாங் நீர்  சுத்திகரிப்பு மையம், செமினி நீர் சுத்திகரிப்பு மையம் 2 மற்றும் மூன்றாவது கிள்ளான் பாலம் ஆகியவை நிர்மாணிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

கையிருப்பில் இருந்த அந்த நிதி உண்மையில் காணாமல் போகவில்லை. மாறாக தேவைக்கு ஏற்ற வகையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டது. என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டில் டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் மந்திரி புசார் பதவியை துறந்தப் பின்னர் மாநில அரசின் கையிருப்பில் இருந்த 100 கோடி வெள்ளிக்கும் மேற்பட்டத் தொகை மாயமானதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்தி தொடர்பில் மந்திரி புசார் இந்த விளக்கத்தை அளித்தார்.

2.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட மூன்றாவது கிள்ளான் பாலம் கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2017ஆம் ஆண்டு பூர்த்தியானது. சுமார் 19 கோடியே 90 லட்சம் வெள்ளி செலவிலான இந்த பாலம் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் பெரிதும் துணை புரிந்தது.

நீர் விநியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் கடந்த 2017ஆம் ஆண்டில் லபோஹான் டாகாங் நீர் சுத்திகரிப்பு மையம் கட்டப்பட்டது. இந்த நீர் சுத்திகரிப்பு மையத்தின் கட்டுமானச் செலவு 42 கோடியே 50 லட்சம் வெள்ளியாகும்.


Pengarang :