PBTSELANGOR

1,000 ஏக்கர் அரசாங்க நிலம் ஆக்கிரமிப்பு- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், நவ 6- விவசாயம், குப்பைகள் கொட்டுவது, குடியிருப்புகளை அமைப்பது ஆகிய நோக்கங்களுக்காக 1,055.27 ஏக்கர் அரசாங்க நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கோல லங்காட்டில் 353 ஏக்கர் நிலமும் கிள்ளானில் 212.77 ஏக்கர் நிலமும் கோல சிலாங்கூர் மற்றும் பெட்டாலிங் மாவட்டத்தில் 100  நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இது தவிர, உலு லங்காட்டில் 84 ஏக்கர் நிலமும் கோம்பாக்கில் 80 ஏக்கர் நிலமும் சிப்பாங்கில் 72 ஏக்கர் நிலமும் உலு சிலாங்கூரில் 50 ஏக்கர் நிலமும் சபாக் பெர்ணமில் 3.5 ஏக்கர் நிலமும் இதே நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது என்றார் அவர்.

நில ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு எதிராக தேசிய நிலச் சட்டத்தின் 452 வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஐந்து லட்சம் வெள்ளிக்கும் மேற்போகாத அபராதம், ஐந்தாண்டு வரையிலான சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று மேரு உறுப்பினர் முகமது பக்ருள்ரஸி முகமது மொக்தார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது மந்திரி புசார் இதனை சொன்னார்.

ஆற்றுத் தூய்மைக்கேட்டை கண்டறிவதற்கு டிரோன் சாதனத்தை பயன்படுத்தும் போது ஆற்றோரங்களில் நில ஆக்கிரமிப்புகளும் கண்டறியப்பட்டன என்றார் அவர்.

Pengarang :