NATIONALSELANGOR

கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்ள சிலாங்கூர் அரசு   வெ. 40 கோடி ஒதுக்கீடு

ஷா ஆலம், நவ 10- கோவிட்-19 நோய்ப் பரவலுக்கு எதிராக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சிலாங்கூர் அரசு 40 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக மாநில சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

சிவப்பு மண்டலங்களில் உள்ள பொதுமக்களுக்கு கோவிட்-19 சோதனையை மேற்கொள்ள 16 லட்சம் வெள்ளியும் சபாவிலிருந்து திரும்பியவர்களுக்கான சோதனைக்கு 13 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளியும் முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம், மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டிற்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

மாநிலம் முழுவதும் உள்ள பதிவு பெற்ற 854 சிறார் பராமரிப்பு மையங்களுக்கு கோவிட்-19 நோய்ப் பரிசோதனை கருவிகளை வழங்க 690,000 வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளாதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள், மாநில கல்வி இலாகா பணியாளர்கள், மாநில அரசு ஊழியர்கள், சமூக மையங்களின் பணியாளர்கள் ஆகியோருக்கு சுவாசக் கவசங்களை இலவசமாக வழங்க 58 லட்சம் வெள்ளி செலவிடப்படவுள்ளது என்றார் அவர்.

மாநில  சட்டமன்றத்தில் இன்று செமென்தா உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். கோவிட்-19 நோய்த் தொற்றை சமாளிப்பதற்கு மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

முன்களப் பணியாளர்களுக்கு உதவ கூடுதல் திட்டங்களை அரசு வகுத்துள்ளது. அவர்களின் பிள்ளைகளைப் பராமரிப்பதற்கு சிறப்பு பராமரிப்பு  மையங்களை உருவாக்குவதும் அதில் அடங்கும் என்றார் அவர்.


Pengarang :